FIFA உலககோப்பை: 41 வயதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை.. மெஸ்ஸி ரெக்கார்ட் முறியடிப்பு
டெக்சாஸ்: கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஜூன் 23 அன்று நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் கே (Group K) பிரிவில், உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, உலகக் கோப்பை வரலாற்றில் இரட்டை கோல்கள் அடித்த மிக வயதான வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
மேலும் 40 வயதை எட்டிய பிறகு ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் இரண்டு கோல்களை அடித்த உலகிலேயே முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.ஆறு வெவ்வேறு ஃபிஃபா உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த ஒரே வீரரான ரொனால்டோ, உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் தனது முதல் கோலையும், 39-வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடித்தார்.

ஜூன் 23, 2026 அன்று 41 ஆண்டுகள் மற்றும் 138 நாட்களைக் கடந்த நிலையில் ரொனால்டோ இச்சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பு, உலகக் கோப்பை ஆட்டத்தில் இரட்டை கோல்கள் அடித்த மிக வயதான வீரர் என்ற சாதனை அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி வசம் இருந்தது.
கடந்த ஜூன் 22, 2026 அன்று ஆர்லிங்டனில் உள்ள ஏடி&டி (AT&T) மைதானத்தில் ஆஸ்திரியாவுக்கு எதிராக நடைபெற்ற குரூப் ஜே (Group J) ஆட்டத்தில் மெஸ்ஸி தனது 38 வயது 363 நாட்களில் அர்ஜென்டினா அணிக்காக இரண்டு கோல்களை அடித்திருந்தார்.
ஃபிஃபா உலகக் கோப்பையில் இரட்டை கோல்கள் அடித்த மிக வயதான வீரர்கள்
| வீரர் | நாடு | வயது | எதிரணி | மைதானம் | தேதி |
|---|---|---|---|---|---|
| கிறிஸ்டியானோ ரொனால்டோ | போர்ச்சுகல் | 41 ஆண்டுகள், 138 நாட்கள் | உஸ்பெகிஸ்தான் | என்ஆர்ஜி மைதானம், ஹூஸ்டன் | ஜூன் 23, 2026 |
| லியோனல் மெஸ்ஸி | அர்ஜென்டினா | 38 ஆண்டுகள், 363 நாட்கள் | ஆஸ்திரியா | ஏடி&டி மைதானம், ஆர்லிங்டன் | ஜூன் 22, 2026 |
| ரோஜர் மில்லா | கேமரூன் | 38 ஆண்டுகள், 34 நாட்கள் | கொலம்பியா | ஸ்டேடியோ சான் பாலோ, நேபிள்ஸ் | ஜூன் 23, 1990 |
| ஒலிவியர் ஜிரார்டு | பிரான்ஸ் | 36 ஆண்டுகள், 53 நாட்கள் | ஆஸ்திரேலியா | அல் ஜனூப் மைதானம், அல் வக்ரா | நவம்பர் 22, 2022 |
| லாஸ்லோ ஃபஸேகாஸ் | ஹங்கேரி | 34 ஆண்டுகள், 243 நாட்கள் | எல் சால்வடார் | நியூவோ எஸ்டாடியோ, எல்சே | ஜூன் 15, 1982 |
உலகக் கோப்பையின் வரலாற்றில் இரட்டை கோல் அடித்த மிக வயதான வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியைத் தொடர்ந்து கேமரூன் நாட்டின் ரோஜர் மில்லா மூன்றாவது இடத்தில் உள்ளார். 1990 ஃபிஃபா உலகக் கோப்பையில் கொலம்பியாவிற்கு எதிரான ஆட்டத்தில் தனது 38 வயது 34 நாட்களில் அவர் இரண்டு கோல்களை அடித்திருந்தார்.
உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக ரொனால்டோ அடித்த இரண்டு கோல்கள், போர்ச்சுகல் நாட்டிற்காக உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைக்க வழிவகுத்தது. ரொனால்டோ தற்போது 24 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 10 கோல்களை அடித்துள்ளார். இதற்கு முன்பு 1966 உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணிக்காக யூசிபியோ (Eusébio) 9 கோல்களை அடித்ததே சாதனையாக இருந்தது.
உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ மட்டும் மேலும் ஒரு கோல் அடித்திருந்தால், உலகக் கோப்பை போட்டியில் ஹேட்ரிக் கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற பெருமையையும் பெற்றிருப்பார்.
தற்போதைய நிலையில், உலகக் கோப்பை ஆட்டத்தில் மூன்று கோல்கள் (ஹாட்ரிக்) அடித்த மிக வயதான வீரர் என்ற சாதனை லியோனல் மெஸ்ஸி வசம் உள்ளது. கடந்த ஜூன் 16, 2026 அன்று அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி தனது 38 வயது 357 நாட்களில் ஹேட்ரிக் கோல் அடித்து இச்சாதனையைப் படைத்தார்.


Click it and Unblock the Notifications

