
சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் டி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் நைஜீரியா என்ற பெரிய சவாலை சந்திக்க உள்ளது குரேஷியா.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. டி பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியுடன் அர்ஜென்டீனா விளையாட உள்ளது. அந்தப் பிரிவில் இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நைஜீரியாவும் குரேஷியாவும் மோத உள்ளன.
----
பிரிவு டி
நைஜீரியா - குரேஷியா
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி
----
டி பிரிவில் அர்ஜென்டீனா அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்கப் போவதில்லை. மற்றொரு அணி எது என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.
சமீபகாலமாக வேகமாக முன்னேறி வரும் ஐஸ்லாந்து ஒரு புறம் இருந்தாலும், குரேஷியாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப் போவது நைஜீரியா தான்.
1998ல் மூன்றாவது இடத்தைப் பிடித்த குரேஷியா, கடந்த உலகக் கோப்பையில் பிரிவுச் சுற்றிலேயே வெளியேறியது.
இந்த உலகக் கோப்பையில் மிகவும் சீனியர் வீரர்கள் அதிகம் கொண்ட நாடாக குரேஷியா உள்ளது. அதே நேரத்தில் இளம் வீரர்களை கொண்ட நாடாக நைஜீரியா உள்ளது.
இதுவரை காலிறுதி சுற்றுக்கு கூட நுழையாத நைஜீரியாவின் இளம் வீரர்களே குரேஷியாவுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளனர்.