பிரான்ஸை கோலடிக்க விடாமல் தடுத்து டிரா செய்தது.... நாக் அவுட் முன்னேறியது டென்மார்க்!
மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை கோலடிக்க விடாமல் தடுத்து, டிரா செய்தது டென்மார்க். இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு டென்மார்க் முன்னேறியது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.
அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களை முடித்துள்ளன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, பி பிரிவில் இருந்து ஸ்பெயின், போர்ச்சுகல், சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
பிரிவு சுற்றில் மூன்றாவது ஆட்டங்கள் நடந்து வருகின்றன. சி பிரிவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பெருவையும் மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸை டென்மார்க்கும் சந்தித்தன.

டென்மார்க் வென்றது
சி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என ஆஸ்திரேலியாவை வென்றது. டென்மார்க் 1-0 என பெருவை வென்றது. அதற்கடுத்து நடந்த டென்மார்க், ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. பிரான்ஸ் 1-0 என பெருவை வென்றது.

இக்கட்டான நிலையில் டென்மார்க்
இதன் மூலம் 2 வெற்றிகளைப் பெற்ற பிரான்ஸ் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இரண்டு தோல்விகளை சந்தித்த பெரு வெளியேறுகிறது. டென்மார்க் 4 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா 1 புள்ளியுடனும் இருந்தன.

பிரான்ஸை வீழ்த்துமா
இந்த நிலையில் இன்று நடந்த சி பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பெருவை சந்தித்தது. மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸை சந்தித்தது டென்மார்க். ஏற்கனவே 4 புள்ளிகளுடன் உள்ள டென்மார்க் இந்த ஆட்டத்தில் வென்றால் அல்லது டிரா செய்தாலே சுலபமாக அடுத்தச் சுற்றுக்கு நுழையலாம் என்ற நிலையில் களமிறங்கியது.

அபாரமாக டிரா செய்தது
அதனால் பிரான்ஸ் எதிராக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது டென்மார்க். இந்த ஆட்டத்தில் 67 சதவீத நேரம் பந்து பிரான்ஸ் அணியிடம் இருந்தது. ஆனால், அந்த அணிக்கு கோலடிக்கும் வாய்ப்புகளை அதிகம் தராமலும், கிடைத்த வாய்ப்புகளை கோலடிக்க விடாமலும் டென்மார்க் தடுத்தது. இறுதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதையடுத்து, பிரான்ஸைத் தொடர்ந்து டென்மார்க்கும் இந்தப் பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications