ஈஸ்ட் பெங்கால் கிளப் செய்த குளறுபடி.... பாதியிலேயே முடிந்த கோஸ்டா ரிக்கா வீரர் பிரஸ் மீட்
கொல்கத்தா : ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணியில் கோஸ்டா ரிக்கா அணியின் ஜானி அகோஸ்டா ஆட உள்ளதாக செய்திகள் வந்தன. அவர் ஈஸ்ட் பெங்கால் அணியில் சேருவதற்கான ஒப்பந்தங்கள் முடிந்த நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மொழிபெயர்ப்பாளர் இல்லாத காரணத்தால் பத்திரிக்கையாளர்கள் பாதியிலேயே திரும்பினர்.
கோஸ்டா ரிக்கா அணி சமீபத்தில் நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை தொடரில் க்ரூப் சுற்றில் மூன்று போட்டிகளில் ஆடியது. அந்த அணி க்ரூப் சுற்றோடு வெளியேறியது. அந்த மூன்று போட்டியிலும் ஜானி அகோஸ்டா ஆடினார். அதே போல 2014 உலகக்கோப்பை தொடரிலும் ஆடி இருக்கிறார்.

அனுபவமிக்க அகோஸ்டா, ஈஸ்ட் பெங்கால் அணியில் சேர்ந்ததை அடுத்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அகோஸ்டாவும், பத்திரிக்கையாளர்களும் கூடிய நிலையில், ஈஸ்ட் பெங்கால் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சித் சென், “அகோஸ்டா ஸ்பானிஷ் மொழி மட்டுமே பேசுவார். எனவே, கேள்விகளை சுருக்கமாக கேளுங்கள். அது அவருக்கு எளிதாக புரியும்படி இருக்கும்” என கூறினார்.
பின்னர், பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சஞ்சித் சென் தானாகவே அகோஸ்டா சார்பாக பதில் அளித்தார். அகோஸ்டா எந்த பதிலும் அளிக்கவில்லை. இதை ஏற்க மறுத்த பத்திரிக்கையாளர்கள், அகோஸ்டா பதில் அளிக்க வேண்டும் என கேட்டனர். இதனால், சஞ்சித் சென் ஈஸ்ட் பெங்கால் அணியின் அதிகாரியான, போர்சுகீஸ் மொழி பேசத் தெரிந்த அல்விடோ டி குன்ஹாவை அழைக்க முயன்றார்.
அவரிடம் தொடர்பு கொள்ள முடியாததால், கூகுள் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் மூலம் கேள்வி - பதிலை மொழி பெயர்க்க முடிவு செய்தனர். எனினும், அந்த அறையில் இணைய வசதி இல்லாததால், வேறு ஒரு அறைக்கு சந்திப்பு மாற்றப்பட்டது. கூகுள் மொழிபெயர்ப்பு சரியான வகையில் அமையாததால், அந்த சந்திப்பு பாதியிலேயே முடிந்தது. வேறு ஒரு நாளில் மீண்டும் பேட்டி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Story first published: Friday, August 10, 2018, 14:27 [IST]
Other articles published on Aug 10, 2018


Click it and Unblock the Notifications