ஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - பெருவுக்கு உணர்வுபூர்வமான ரீஎன்ட்ரி!
சென்னை:21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
நாடு : பெரு
சி பிரிவில் பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரேலியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 16ல் டென்மார்க்
ஜூன் 21ல் பிரான்ஸ்
ஜூன் 26ல் ஆஸ்திரேலியா
ஃபிபா தரவரிசை : 11
கடைசியாக பங்கேற்ற உலகக் கோப்பை : 1982 (பிரிவு சுற்றில் வெளியேறியது)
உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1970, 1978ல் காலிறுதி
முக்கிய வீரர்கள் : ஜெபர்சன் பர்பான், பாவ்லோ குரேரோ, கிறிஸ்டியான் கியூவா
கோச் : ரிகார்டோ கரேகா
பெரு அணி, கடைசியாக 1982ல் உலகக் கோப்பையில் விளையாடி பிரிவு சுற்றிலேயே வெளியேறியது. தற்போது 36 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட உள்ளது.
1986 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின்போது பெருவுக்கு எதிராக கோலடித்த அர்ஜென்டீனாவைச் சேர்ந்த கரேகா தற்போது பெரு அணியின் கோச்சாக உள்ளார்.
36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் விளையாடுவதால் அந்த அணி வீரர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளனர்.
குறிப்பாக அணியின் கேப்டன் பாவ்லோ குரேரோ இரண்டு மடங்கு அளவுக்கு உணர்வுபூர்வமான உலகக் கோப்பை இது. உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாக தடை விதிக்கப்பட்டார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தடை நீங்கி இந்த உலகக் கோப்பையில் அவர் பங்கேற்கிறார்.
அணியில் ஒரு சில முக்கியமான வீரர்கள் உள்ளனர். ஆனால், மிகப் பெரிய வெற்றிகளை குவிப்பதற்கு போதுமான பலம் இல்லை. டென்மார்க் அல்லது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெறுவதற்கு பெருவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவது என்பது சுலபமில்லை.


Click it and Unblock the Notifications