
குரேஷியா கடந்து வந்த பாதை
இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா அனைத்து ஆட்டங்களிலும் வென்றுள்ளது. லீக் சுற்றில் நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது. நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. காலிறுதியில் ரஷ்யாவை 4-3 என பெனால்டிஷூட்டில் வென்றது. நான்காவது முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ள குரேஷியா, 2வது முறையாக அரை இறுதியில் விளையாடியது.

இங்கிலாந்து கடந்த வந்த பாதை
இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து, லீக் சுற்றில் 3ல் 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றது. துனீஷியாவை 2-1, பனாமாவை 6-1 என்று வென்ற இங்கிலாந்து, கடைசி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் கொலம்பியாவை வென்றது. கால் இறுதியில் ஸ்வீடனை 2-0 என வென்றது.

முதல் கோல் அடித்தது
52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வெல்லும் வெறியோடு களமிறங்கிய இங்கிலாந்து அணி, இன்று நடந்த அரை இறுதியில் குரேஷியாவை சந்தித்தது. ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டிரிப்பர் அபாரமாக கோலடித்தார். முதல் பாதியின் இறுதியில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் பெரிசிக் கோலடிக்க குரேஷியா 1-1 என சமநிலையை உருவாக்கினார். ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. அதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

இங்கிலாந்து நொறுங்கியது
கூடுதல் நேரத்தின் முதல் பாதியிலும் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. 109வது நிமிடத்தில் மன்ட்சுகிக் கோலடிக்க 2-1 என குரேஷியா முன்னிலை பெற்றது. துவக்கத்திலேயே இங்கிலாந்து கோலடித்தாலும், அதன்பிறகு, அதற்கு கோலடிக்கும் வாய்ப்பைத் தராமல், அதே நேரத்தில் இரண்டு கோல்களை அடித்து அசத்தியது குரேஷியா. மிகவும் வலுவான நடுகள வீரர்களை கொண்டுள்ளது குரேஷியாவுக்கு மிகப் பெரிய சாதகமானது. கூடுதல் நேரத்தின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வென்றது குரேஷியா. முதல் முறையாக பைனல் நுழைந்துள்ள குரேஷியா, அதில் பிரான்ஸை சந்திக்க உள்ளது.


Click it and Unblock the Notifications














