ஸ்வீடனுக்கு எதிராக ஸ்வீட் வெற்றி.... அரை இறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
சமாரா: 52 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வெல்லும் இலக்கோடு களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, இன்று நடந்த காலிறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வென்றது. மூன்றாவது முறையாக அரை இறுதிக்குள் இங்கிலாந்து நுழைந்துள்ளது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து ஜூன் 30 முதல் ஜூலை 3ம் தேதி வரை நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்தன.
இந்த உலகக் கோப்பையில் 7 முன்னாள் சாம்பியன்கள் என மொத்தம் 32 நாடுகள் களமிறங்கின. தற்போது காலிறுதி சுற்றை 8 அணிகள் எட்டியுள்ளன.
உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை காலிறுதியில் விளையாடுகின்றன. நேற்று நடந்த காலிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என பிரேசிலை வென்றது. இன்று நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 2-0 என ஸ்வீடனை வென்றது. மற்றொரு காலிறுதியில் ரஷ்யா - குரேஷியா சந்திக்கின்றன. அதில் வெல்லும் அணியுடன் அரை இறுதியில் இங்கிலாந்து மோதும்.

இங்கிலாந்து கடந்த வந்த பாதை
இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து, லீக் சுற்றில் 3ல் 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பெற்றது. துனீஷியாவை 2-1, பனாமாவை 6-1 என்று வென்ற இங்கிலாந்து, கடைசி ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் கொலம்பியாவை வென்றது. இதுவரை உலகக் கோப்பையில் 8 முறை காலிறுதியில் விளையாடி அதில் இரண்டு முறை மட்டுமே முன்னேறியுள்ளது. அதில் 1966ல் கோப்பையை வென்றது.

ஸ்வீடன் கடந்து வந்த பாதை
இந்த உலகக் கோப்பையில் எப் பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்வீடன், லீக் சுற்றில் 3ல் 2ல் வெற்றி, ஒரு தோல்வியை பெற்றது. தென்கொரியாவை 1-0, மெக்சிகோவை 3-0 என வென்றது. நடப்பு சாம்பியன் ஜெர்மனியிடம் 2-1 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்தை 1-0 என வென்றது. இதுவரை 5 முறை காலிறுதியில் விளையாடி அதில் 4 முறை வென்றுள்ளது. 1958ல் பைனலில் விளையாடியது.

முன்னாள் சாம்பியன்
இரு அணிகளும் இதுவரை நேரடியாக விளையாடியுள்ள 24 ஆட்டங்களில் இங்கிலாந்து 8 முறையும், ஸ்வீடன் 7 முறையும் வென்றுள்ளன. 9 முறை டிராவானது. 1966ல் கோப்பையை வென்ற பிறகு 52 ஆண்டுகளில் 10வது முறையாக உலகக் கோப்பையில் இங்கிலாந்து விளையாடுகிறது. கடைசியாக 1990ல் அரை இறுதிக்கு முன்னேறியது.

அரை இறுதி முன்னேறியது
இன்று நடந்த ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இங்கிலாந்து வேகமாக விளையாடி அசரடித்தது. ஸ்வீடன் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் சவால் விடுத்தது. அதையும் மீறி 30வது நிமிடத்தில் மாகுரே கோலடிக்க 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் டெலே அலீ கோலடிக்க 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்று, அரை இறுதிக்கு இங்கிலாந்து முன்னேறியது.


Click it and Unblock the Notifications