உலகக்கோப்பையில் குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி.. ஹாரி, பெல்லிங்ஹாம் அதிரடி
டெக்சாஸ்: 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் எல் பிரிவின் பரபரப்பான லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி தனது உலகக் கோப்பை பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. கேப்டன் ஹாரி கேன் அடித்த பெனால்டி பந்தை குரோஷிய கோல்கீப்பர் தடுத்த போதிலும், அவர் கோடு தாண்டி முன்னால் வந்ததால் மீண்டும் பெனால்டி அடிக்க நடுவர் உத்தரவிட்டார். இரண்டாவது வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திய கேன், இங்கிலாந்தத்தை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.

ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் குரோஷியாவின் மார்ட்டின் பாடுரினா ஒரு கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். ஆனால், அடுத்த 6 நிமிடங்களிலேயே டெக்லான் ரைஸ் வீசிய கார்னர் பந்தை ஹாரி கேன் தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதன் மூலம் உலகக் கோப்பையில் தனது 10வது கோலைப் பதிவு செய்த கேன், இங்கிலாந்துக்காக உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த கேரி லினேக்கரின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்தார். முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் குரோஷியாவின் பீட்டர் முசா ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 2-2 என டிரா ஆனது.
இரண்டாவது பாதி தொடங்கிய 2வது நிமிடத்திலேயே (47வது நிமிடம்) இங்கிலாந்தின் இளம் நட்சத்திரம் ஜூட் பெல்லிங்ஹாம் ஒரு அபாரமான கோல் அடித்து இங்கிலாந்தை மீண்டும் 3-2 என முன்னிலை பெறச் செய்தார். ஆட்டத்தின் இறுதி நேரத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய மார்கஸ் ராஷ்ஃபோர்ட் 85வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இங்கிலாந்தின் 4-2 என்ற அசாத்திய வெற்றியை உறுதி செய்தார்.
புதிய பயிற்சியாளர் தாமஸ் துச்சலின் கீழ் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றி ஒரு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. இப்போட்டியை மைதானத்தில் 70,000 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
