10 வீரர்களுடன் வென்ற இங்கிலாந்து.. உலகக்கோப்பை கனவை இழந்த மெக்சிகோ.. ஜூட் பெல்லிங்ஹாம் 2 கோல்!
மெக்சிகோ சிட்டி: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், மெக்சிகோ அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. வரலாற்றுச் சிறப்புமிக்க அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், 10 வீரர்களுடன் போராடிய இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் 98 வினாடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 36 மற்றும் 38-வது நிமிடங்களில் அவர் அடித்த கோல்களால் இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றது. எனினும், ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மெக்சிகோவின் ஜூலியன் குய்னோன்ஸ் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டம் 2-1 என முடிந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பெரும் திருப்பங்கள் அரங்கேறின. 56-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜாரெல் குவான்சாவுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டதால், இங்கிலாந்து அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. எனினும், 60-வது நிமிடத்தில் இங்கிலாந்துக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கேப்டன் ஹாரி கேன் கோலாக மாற்றினார். இது நடப்பு உலகக்கோப்பையில் அவரது 6-வது கோலாகும். தொடர்ந்து 69-வது நிமிடத்தில் மெக்சிகோவுக்குக் கிடைத்த பெனால்டியை ரவுல் ஜிமினெஸ் கோலாக்க, ஆட்டம் 3-2 என விறுவிறுப்படைந்தது.
ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் மெக்சிகோ அணி ஆட்டத்தை சமன் செய்ய தீவிரமாகப் போராடியது. ஆனால், இங்கிலாந்து கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் பல அபாரமான சேவ்களைச் செய்து மெக்சிகோவின் கோல் முயற்சிகளை முறியடித்தார். 11 நிமிடங்கள் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் மெக்சிகோவால் கோல் அடிக்க முடியாமல் போனதால், இங்கிலாந்து 3-2 என த்ரில் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது.
ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் காயமடைந்து மைதானத்தில் இருந்து வெளியேறியது அந்த அணிக்குச் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. காலிறுதிச் சுற்றில் நார்வே அணியை இங்கிலாந்து எதிர்கொள்ளவுள்ளது.


Click it and Unblock the Notifications
