10 கோல்கள்.. மிரள வைத்த இங்கிலாந்து - பிரான்ஸ் உலகக்கோப்பை போட்டி.. இப்படி நடந்ததே இல்லை
மியாமி: 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 3வது இடத்திற்காக நடந்த ஆட்டத்தில், பிரான்ஸ் அணியை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் 3வது இடத்திற்கான போட்டியில் 10 கோல்கள் அடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். மேலும் 1982ஆம் ஆண்டுக்குப்பிறகு உலகக் கோப்பையில் அதிக கோல்கள் விளாசப்பட்ட போட்டியாகவும் இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இந்தப் போட்டியின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே டெக்லான் ரைஸ் ஒரு கோல் அடித்து இங்கிலாந்துக்கு 1-0 என முன்னிலை தேடித்தந்தார். தொடர்ந்து 18வது நிமிடத்தில் எஸ்ரி கோன்சா ஒரு ஹெட்டர் கோல் அடித்தார். இங்கிலாந்தின் புகாயோ சாகா 37வது நிமிடம் மற்றும் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

ஆனால், 2வது பாதியில் பிரான்ஸ் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசர வைத்தது. ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே தனது முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 54வது நிமிடத்தில் பிராட்லி பார்கோலாவும், 67வது நிமிடத்தில் மீண்டும் எம்பாப்பேயும் கோல் அடிக்க, இங்கிலாந்தின் 4-0 என்ற பெரிய முன்னிலை 4-3 எனச் சரிந்தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் 22 கோல்களுடன் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற லியோனல் மெஸ்ஸியின் சாதனையை எம்பாப்பே முறியடித்தார்.
இதை அடுத்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி புகாயோ சாகா தனது 3வது கோலை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன், இங்கிலாந்தை 5-3 என முன்னிலை பெறச் செய்தார். விடாமல் போராடிய பிரான்ஸ் அணி கூடுதல் நேரத்தில் (90+6 நிமிடத்தில்) உஸ்மான் டெம்பேலே மூலம் 4வது கோலை அடித்து 5-4 என நெருக்கடி கொடுத்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் (90+8 நிமிடத்தில்) இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம் ஒரு கோல் அடித்து இங்கிலாந்தின் 6-4 என்ற இமாலய வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வரலாற்று வெற்றியின் மூலம், 1966ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதற்குப் பிறகு இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வரலாற்றில் தனது மிகச்சிறந்த வெற்றியை பதிவு செய்தது. பிரான்ஸ் அணி தோற்றாலும், இந்த உலகக் கோப்பை தொடரில் 10 கோல்களுடன் எம்பாப்பே தங்கக் காலணி பந்தயத்தில் முதலிடத்தில் நீடிக்கிறார்.


Click it and Unblock the Notifications
