பெர்லின் : கால்பந்து உலகில் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு மிகப்பெரிய தொடராக கருதப்படுவது யூரோ கோப்பை தொடர் தான். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடரில் ஐரோப்பாவில் உள்ள தலைசிறந்த நாடுகள் பங்கேற்கும்.
இந்த நிலையில் குரூப் பி பிரிவில் பெர்லின் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் மூன்று முறை சாம்பியன் ஆன ஸ்பெயினும், 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி போட்டி வரை சென்ற குரோஷிய அணியும் பல பரிட்சை நடத்தியது.

யூரோ கோப்பை தொடருக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கல் அணியை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் குரோஷியா வீழ்த்திருந்ததால், அந்த அணி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருந்தது. சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் இந்த போட்டியில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஸ்பெயினுக்கு குரோஷியா கடும் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடந்ததோ முற்றிலும் வேறு
சொல்ல போனால் குரேஷியா அணியை ஸ்பெயின் கதறவிட்டது.
பந்தை எப்போதுமே தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டிக் டாக்கா முறையை பயன்படுத்தி ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 29 வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஆல்வாரோ மோரட்டா முதல் கோல் அடிக்க அடுத்த சில நிமிடங்களில் 32வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் பெபியன் இரண்டாவது கோல் அடித்தார்.
இதனால் குரேஷியா அணி பின்னடைவை சந்தித்தது. இன்னும் ஆட்டத்தின் முதல் பாதியில் கூடுதல் நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேனி கர்வாஜல் மூன்றாவது கோல் அடிக்க முதல் பாதியில் ஸ்பெயின் அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதனை அடுத்து இரண்டாவது பாதியில் குரோஷிய அணி கடுமையாக போராடி ஸ்பெயின் அணியை கோல் அடிக்க முடியாமல் கட்டுப்படுத்தியது.
இந்த நிலையில் ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை குரோஷியா வீணடித்தது. அதே நிமிடத்தில் குரோஷியா அடித்த கோல் ஆப் சைடு என நிராகரிக்கப்பட்டது. இதை அடுத்து போட்டியின் எஞ்சிய நிமிடங்களில் ஸ்பெயின் மீண்டும் தற்காப்பு ஆட்டத்தில் ஆடி நேரத்தை கடத்தியது. இதன் மூலம் ஸ்பெயின் அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.