FIFA: ஆஸ்திரியா - அல்ஜீரியா ஆட்டம் 6 கோல் அடித்து டிரா.. இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி
நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் குரூப் ஜே பிரிவின் கடைசி லீக் போட்டியில், ஆஸ்திரியா மற்றும் அல்ஜீரியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில், மொத்தம் 6 கோல் அடித்து டிராவில் முடிந்தது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அரங்கேறிய அடுத்தடுத்த திருப்பங்களால் இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
இப்போட்டியின் தொடக்கத்திலேயே ஆஸ்திரியாவின் மார்கோ அர்னாடோவிக் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். ஆனால், முதல் பாதி முடிவதற்குள் அல்ஜீரியாவின் ரஃபிக் பெல்காலி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் ஆஸ்திரியாவின் மார்செல் சபிட்சர் மற்றொரு கோல் அடிக்க, அதற்கு அல்ஜீரியாவின் ரியாத் மஹ்ரெஸ் உடனடியாகப் பதிலடி கொடுத்து மீண்டும் ஆட்டத்தை சமன் செய்தார்.

ஆட்டத்தின் கூடுதல் நேரமான 93-வது நிமிடத்தில், ரியாத் மஹ்ரெஸ் அல்ஜீரியாவுக்காக மீண்டும் ஒரு கோல் அடித்து 3-2 என அணியை முன்னிலை பெறச் செய்தார். இந்த கோலால் ஆஸ்திரியா தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஆனால், ஆட்டத்தின் கடைசி வினாடியில் (96-வது நிமிடத்தில்) ஆஸ்திரியாவின் சாசா கலாஜ்ட்சிக் தலையால் முட்டி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 3-3 என சமநிலைக்குக் கொண்டு வந்து அணியைக் காப்பாற்றினார்.
இந்த டிராவின் மூலம் ஆஸ்திரியா அணி குரூப் ஜே பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்குத் தகுதி பெற்றது. அடுத்த சுற்றில் ஆஸ்திரியா அணி பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது. மற்றொருபுறம், சிறந்த 3-வது இடத்தைப் பிடித்த அணியாக அல்ஜீரியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அடுத்த சுற்றில் அல்ஜீரியா அணி சுவிட்சர்லாந்துடன் மோதவுள்ளது.
அதே நேரத்தில், ஆஸ்திரியா இப்போட்டியில் தோல்வியடையும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ஈரான் அணிக்கு, கலாஜ்ட்சிக்கின் கடைசி நிமிட கோல் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதனால் ஈரான் அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறியுள்ளது.


Click it and Unblock the Notifications
