மழைக்கு மத்தியில் எம்பாப்பே 2 கோல்.. ஈராக்கை 3-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்
பிலடெல்பியா: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் லீக் போட்டியில் ஈராக் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. மோசமான வானிலை மற்றும் பலத்த மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே இரட்டை கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.
பிலடெல்பியாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி, இடியுடன் கூடிய பலத்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி சுமார் 2 மணி நேரம் 21 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னதாக ஆட்டத்தின் 14வது நிமிடத்திலேயே எம்பாப்பே அற்புதமாக ஒரு கோல் அடித்து பிரான்ஸ் அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார். இதன் பின்னர் பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. இதில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணிக்கு, இரண்டாவது பாதியில் எம்பாப்பே தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பேலே மற்றொரு கோல் அடிக்க, பிரான்ஸ் அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஈராக் அணி தற்காப்பில் சிறப்பாக செயல்பட்ட போதிலும், அவர்களின் நட்சத்திர வீரர் அய்மென் உசேன் காயமடைந்து வெளியேறியது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
இந்த போட்டியில் அடித்த இரண்டு கோல்களின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் கிலியன் எம்பாப்பே அடித்த ஒட்டுமொத்த கோல்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோவின் சாதனையை சமன் செய்துள்ள எம்பாப்பே, உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸிக்கு (18 கோல்கள்) அடுத்தபடியாக மிக நெருக்கமாக உள்ளார். இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி 'ரவுண்ட் ஆப் 32' சுற்றுக்கு தகுதி பெற்று தனது உலகக் கோப்பை கனவை தக்கவைத்துள்ளது.


Click it and Unblock the Notifications
