FIFA: தென் கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ.. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியானது
குவாடலஹாரா: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மெக்சிகோ அணி, முதல் அணியாக 'ரவுண்ட் ஆப் 32' சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. அக்ரான் மைதானத்தில் உள்நாட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவுக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின.
இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியின் 5வது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்கு சாதகமான திருப்புமுனை ஏற்பட்டது. தென் கொரிய கோல்கீப்பர் கிம் சியுங்-க்யூ பந்தைப் பிடிப்பதில் செய்த சிறிய தவறை சரியாகப் பயன்படுத்திய மெக்சிகோ மிட்பீல்டர் லூயிஸ் ரோமோ, பந்தை லாவகமாக கோல் போஸ்ட்டிற்குள் அனுப்பி மெக்சிகோவிற்கு 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுத் தந்தார்.

இதன்பின்னர் ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கோலை சமன் செய்ய தென் கொரிய வீரர்கள் தீவிரமாக போராடினர். தென் கொரியாவின் சோ குவே-சுங் மற்றும் யாங் ஹியூன்-ஜுன் ஆகியோர் அடுத்தடுத்து அடித்த கோல் முயற்சிகளை மெக்சிகோ கோல்கீப்பர் ரவுல் ரன்கல் மிக அற்புதமாக தடுத்து நிறுத்தினார். அவரது இந்த இரட்டை தடுப்பு ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இறுதியில் மெக்சிகோ 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை தன்வசப்படுத்தியது. மெக்சிகோ அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது.
தற்போது தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்றதன் மூலம் 6 புள்ளிகளுடன் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தென் கொரிய அணி தனது அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. மெக்சிகோ அணி தனது கடைசி லீக் போட்டியில் வரும் ஜூன் 25 அன்று செக் குடியரசு அணியை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications
