FIFA: 4 கோல் அடித்து ஈராக்கை ஓடவிட்ட நார்வே.. எர்லிங் ஹாலண்ட் 2 கோல் அடித்து மாஸ் சாதனை
பாஸ்டன்: 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ஐ பிரிவு ஆட்டத்தில், நட்சத்திர ஸ்ட்ரைக்கர் எர்லிங் ஹாலண்டின் அதிரடி இரட்டை கோல்களின் உதவியுடன் நார்வே அணி 4-1 என்ற கணக்கில் ஈராக்கை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நார்வே மற்றும் ஈராக் அணிகள் மோதின.
சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை போன்ற பெரிய தொடருக்குத் தகுதி பெற்றுள்ள நார்வே அணிக்கு எர்லிங் ஹாலண்ட் மற்றும் மார்ட்டின் ஒடேகார்ட் ஆகியோர் பெரும் பலமாக உள்ளனர். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் டேவிட் மோல்லர் வோல்ஃப் கொடுத்த கிராஸ் பந்தை பெற்றுக்கொண்ட ஹாலண்ட், நார்வேயின் முதல் கோலை அடித்தார்.

எனினும், ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் ஈராக்கின் அய்மென் ஹுசைன் தலையால் முட்டி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். ஆனால், முதல் பாதியின் இறுதி நேரத்தில் ஈராக் கோல்கீப்பர் ஜலால் ஹசன் செய்த தவறான பாஸை தட்டிப்பறித்த ஹாலண்ட் தனது 2வது கோலை அடித்தார். இதன் மூலம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் தனது கோல் எண்ணிக்கையை வெறும் 51 ஆட்டங்களில் 57 ஆக அவர் உயர்த்தி சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து 76வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய லியோ ஆஸ்டிகார்ட் ஒரு கோல் அடிக்க நார்வே 3-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஹாலண்ட் தலையால் முட்டிய பந்து ஈராக் வீரர் ஹுசைன் மீது பட்டு 'ஓன் கோலாக' (Own Goal) மாற, நார்வே 4-1 என்ற கணக்கில் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் ஐ பிரிவில் நார்வே 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நேற்று செனகலை 3-1 என வீழ்த்திய பிரான்ஸ் அணி 2வது இடத்தில் உள்ளது. நார்வே அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஜூன் 22 அன்று செனகலை எதிர்கொள்ள உள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் களம் காணும் ஈராக் அணிக்கு இந்த தோல்வி ஏமாற்றத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications
