FIFA: ‘0’வில் இருந்து மீண்டு எழுந்த தென்கொரியா.. செக் குடியரசுக்கு எதிராக உலகக் கோப்பையில் வெற்றி
குவாடலஜாரா: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செக் குடியரசு அணிக்கு எதிரான குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில், பின் தங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்து 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியா வெற்றி பெற்றது. மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டம் தொடங்கியதில் இருந்தே தென்கொரிய அணி ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக கேப்டன் சன் ஹியுங்-மின் பல அருமையான வாய்ப்புகளை உருவாக்கினார். ஆனாலும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
தொடர்ந்து 59வது நிமிடத்தில் செக் குடியரசு அணியின் கேப்டன் லாடிஸ்லாவ் கிரெய்ச்சி தலையால் முட்டி ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். தென்கொரியாவின் பதிலடி மிக வேகமாக இருந்தது. ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் ஹவாங் இன்-பியோம் ஒரு லாவகமான கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் செக் குடியரசுவின் டோமஸ் சௌசெக் அடித்த கோல் ஆஃப்சைடு காரணமாக நடுவர்களால் மறுக்கப்பட்டது. அதனால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய தென்கொரியா, 80வது நிமிடத்தில் தனது 2வது கோலை அடித்தது. ஹவாங் இன்-பியோம் பாஸ் செய்த பந்தை மாற்று வீரராகக் களமிறங்கிய ஓ ஹியோன்-கியூ கோலாக மாற்றினார். இதன் மூலம் தென்கொரியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இறுதியில் வெற்றியும் பெற்றது.
இப்போட்டியில் 1 கோல் மற்றும் 1 அசிஸ்ட் செய்ததன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் இந்த சாதனையைப் படைத்த 3வது தென்கொரிய வீரர் என்ற பெருமையை ஹவாங் இன்-பியோம் பெற்றார். இதற்கு முன்னதாக 1986ல் சோய் சூன்-ஹோ மற்றும் 1994ல் ஹாங் மியுங்-போ ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் தென்கொரியா 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவை 2-0 என வீழ்த்திய மெக்சிகோ அணி சிறந்த கோல் வித்தியாச அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த வியாழக்கிழமை நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் தென்கொரியா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதவுள்ளன.


Click it and Unblock the Notifications

