தோல்வியடைந்தாலும் முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு சென்று கனடா சாதனை.. சுவிட்சர்லாந்து முதலிடம்
வான்கூவர்: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் பி பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், கனடா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து வீழ்த்தியது. இப்போட்டியில் தோல்வியடைந்த போதிலும், கனடா அணி தனது உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
வான்கூவரில் உள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இரு அணிகளும் தொடக்கம் முதலே மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாடின. இதனால் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. சுவிஸ் கேப்டன் கிரானிட் ஷாகா மற்றும் கனடா வீரர் கைல் லாரின் இடையே மைதானத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இருவருக்கும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. முதல் பாதியில் இரு அணிகளும் தலா 3 முறை மட்டுமே கோல் அடிக்க முயற்சி செய்தன.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி ஆட்டத்தை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் ஜோஹன் மன்சாம்பி கொடுத்த பாஸைப் பயன்படுத்தி ரூபன் வர்காஸ் ஒரு நேர்த்தியான கோல் அடித்து சுவிஸ் அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார். அடுத்த 11வது நிமிடத்தில் பிரீல் எம்போலோ கொடுத்த அருமையான பாஸைப் பெற்றுக்கொண்ட இளம் வீரர் ஜோஹன் மன்சாம்பி, பந்தை கோல் போஸ்ட்டிற்குள் அனுப்பி சுவிட்சர்லாந்தின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.
இதற்கிடையில், ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களம் இறங்கிய கனடாவின் பிராமிஸ் டேவிட், தான் விளையாடிய முதல் பந்திலேயே அபாரமாக ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 2-1 என மாறியது. கடைசி நிமிடங்களில் கனடா அணி கோலை சமன் செய்ய தீவிரமாகப் போராடிய போதிலும், சுவிஸ் கோல்கீப்பர் கிரிகோர் கோபல் அதனைத் தடுத்து நிறுத்தினார்.
ஆட்ட நேர முடிவில் சுவிட்சர்லாந்து 2 - 1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சுவிட்சர்லாந்து 7 புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் முதலிடம் பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதே பிரிவில் கனடா அணி இரண்டாவது இடம் பிடித்து தனது உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications

