சொல்லி வச்சு கில்லி மாதிரி ஆடிய ஹஸார்ட்.. அசத்திய பெல்ஜியம்!
மாஸ்கோ: பெல்ஜியத்திற்காக நான் ஆடும் கடைசி உலகக் கோப்பைத் தொடர் இதுதான் என்று கூறியிருந்தார் பெல்ஜியம் அணியின் வீரர் ஈடன் ஹஸார்ட். அதை நிரூபிப்பது போல ஒவ்வொரு விறுவிறுப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.
இன்றைய துனீஷியாவுக்கு எதிரான போட்டியிலும் ஹஸார்ட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவரை 2 கோல்களை அவர் அடித்துள்ளார். பெல்ஜியம் அணியின் முதல் கோலும், 4வது கோலும் இவருடையதாகும்.
திங்கள்கிழமை நடந்த போட்டியில் பனாமாவை பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் துவைத்து எடுத்தது. துனீஷியாவுக்கு எதிரான போட்டியில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. குறிப்பாக ஹஸார்ட் மீது அதிக நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் குவிந்திருந்தது. அதை அழகாக கையாண்டு கோலடித்தார் ஹஸார்ட்.

போட்டிகள் கடுமையானவை
போட்டிக்கு முன்பு அவர் அளித்த ஒரு பேட்டியில், மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் உலகக் கோப்பை போட்டி இது. கிட்டத்தட்ட எல்லா போட்டிகளுமே ஒரு கோல் அல்லது 2 கோல் வித்தியாசத்தில்தான் வெற்றிதோல்வியை நிரூபிப்பதாக உள்ளது. அத்தனை போட்டிகளுமே கடுமையாக உள்ளன.

எப்போதும் வெல்ல முடியாது
நாங்கள் பனாமா போட்டியில் 3-0 என்ற கணக்கில் வென்றோம். நல்ல விஷயம்தான். ஆனால் எல்லாப் போட்டிகளிலும் இது சாத்தியம் இல்லை. நாங்கள் எப்போதும் தவறே செய்யாமல் விளையாட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எல்லா நேரத்திலும் அதுசாத்தியம் இல்லை.
கஷ்டப்பட வேண்டி வரும்
சில நேரங்களில் நீங்கள் ஒரு கோலுக்கே போராட வேண்டிய நிலை ஏற்படலாம். எங்களது அணியில் திறமைகளுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் போட்டிகள் கடுமையானவை என்பதை யாரும் மறக்க கூடாது. நிச்சயம் ரசிகர்களை மனதில் வைத்துத்தான் ஆடுவோம்.
சிறப்பாக ஆடுவேன்
இதுதான் எனது கடைசி உலகக் கோப்பை. அந்த உணர்வுடன்தான் நான் ஆடுகிறேன். எனக்கு 27 வயதுதான் ஆகிறது. இது எனது 2வது உலகக்கோப்பை. ஆனால் இதை கடைசி உலகக் கோப்பையாக நான் கருதுகிறேன். எனவே சிறப்பான தொடராக இதை மாற்ற முயல்வேன் என்றார் ஹஸார்ட்.


Click it and Unblock the Notifications