FIFA WC: ஒரு வாரமா பிளான் போட்டோம்.. 5 விநாடியில் மெஸ்ஸி சுக்குநூறாக உடைத்தார்- இங்கிலாந்து கோட்ச்
நியூயார்க்: ஃபிஃபா உலககோப்பையில் அர்ஜென்டினாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக, மெஸ்ஸியைத் தடுப்பதற்காக தங்கள் அணி தீவிரத் திட்டங்களை வகுத்திருந்ததாகவும், ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்ததாகவும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தாமஸ் துஷெல் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை அரையிறுதியில் மெஸ்ஸியின் இரண்டு அசிஸ்ட்டுகள் மூலம் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மெஸ்ஸியைத் தடுக்க தாங்கள் மேற்கொண்ட பணிகள் போதுமானதாக இல்லை என்று துஷெல் தெரிவித்தார். மேலும், ஆட்டத்தின் போக்கையே மாற்றிய மெஸ்ஸியின் அசாத்திய திறமையையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இங்கிலாந்து அணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. ஆட்டத்தின் 85-வது நிமிடம் வரை 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகித்தது. தாமஸ் துஷெல் வகுத்த வியூகங்கள், பலனை தரும் தருவாயில் இருந்தது. ஆனால், தான் ஏன் உலகின் மிகச்சிறந்த வீரர் என்பதை மெஸ்ஸி மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துக் காட்டினார்.
ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் மெஸ்ஸி வழங்கிய இரண்டு அபாரமான அசிஸ்ட்டுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றின. இதன் மூலம் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் அசத்தலான வெற்றியை பெற்றது. இது இங்கிலாந்து அணியையும் அதன் பயிற்சியாளர் துஷெலையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
"வரலாற்றில் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களுக்கு எதிராக நான் பயிற்சியாளராகச் செயல்பட்டிருக்கிறேன். ஆனால் இது போன்ற இரவுகள் தான் லியோனல் மெஸ்ஸி ஏன் மற்றவர்களிடம் இருந்து தனித்து நிற்கிறார் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்றன. வாரம் முழுவதும் அவரைத் தடுக்க நாங்கள் தயாரானோம். எங்களது திட்டங்கள், தடுப்பாட்ட உத்திகள், அறிவுறுத்தல்கள் என அனைத்தும் அவரிடம் எடுபடவில்லை. ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றிய இரண்டு அசாத்திய தருணங்கள் மூலம் அவர் எங்களைத் தண்டித்துவிட்டார்," என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் துஷெல் தெரிவித்தார்.
"85 நிமிடங்களுக்கு நீங்கள் அவரைத் தடுத்து நிறுத்தலாம், ஆனால் நீங்கள் உருவாக்கிய அனைத்தையும் தவிடுபொடியாக்குவதற்கு மெஸ்ஸிக்கு வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே போதுமானது. இன்று இரவு அதுதான் நடந்தது. பதற்றமின்றி, தேவையற்ற அசைவுகள் ஏதுமின்றி, இரண்டு மிகச்சிறந்த அசிஸ்ட்டுகளை அவர் வழங்கினார். இது முற்றிலும் அவரது கால்பந்து அறிவை காட்டுகிறது. அவர் ஆட்டத்தை வலுக்கட்டாயமாக நகர்த்துவதில்லை. அவர் காத்திருக்கிறார்.நீங்கள் ஒரு தவறு செய்யும் போது, ஆட்டம் உங்கள் கையை விட்டுப் போய்விடுகிறது," என்று அவர் கூறினார்.
"அவர் பந்தைப் பெறும் ஒவ்வொரு முறையும் ஆபத்து என்பதை நான் அறிந்திருந்ததால், எல்லையில் இருந்து நான் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தேன். என் வீரர்களும் அதை அறிந்திருந்தனர். எனினும், மெஸ்ஸியால் என்ன செய்ய முடியும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பதும், அதைத் தடுப்பதும் முற்றிலும் வேறுபட்டவை. உலகக் கால்பந்தில் வேறு எவராலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத பாஸ்களை அவர் அநாயசமாகக் கடத்துகிறார்," என்றார்.
"மக்கள் வேகம் மற்றும் வலிமை பற்றிப் பேசுகிறார்கள். மெஸ்ஸிக்கு இவை இரண்டும் தேவையில்லை. மைதானத்தில் உள்ள ஒவ்வொரு தடுப்பாட்ட வீரரைக் காட்டிலும் அவரது மூளை வேகமாகச் செயல்படுகிறது. ஆட்டத்தின் வேகத்தை அவரே தீர்மானிக்கிறார், இடைவெளிகளைக் கையாள்பவர் மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்துவது போல் காட்டிக் கொள்ளாமலேயே எதிரணியைத் துவம்சம் செய்கிறார். இதுவே உண்மையான சாதனையாளரின் அடையாளம்," என்று புகழ்ந்தார்.
"இந்தத் தோல்வி இங்கிலாந்துக்கு எவ்வளவு வேதனையானதாக இருந்தாலும், உண்மையை மறைக்க நான் விரும்பவில்லை. தனது 39-வது வயதிலும் விளையாட்டின் எல்லையைத் தொடர்ந்து மாற்றி அமைத்து வரும் ஒரு கால்பந்து வீரரால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். உலகக் கோப்பை அரையிறுதியில் இரண்டு அசிஸ்ட்டுகளை வழங்கி, தனது நாட்டை மற்றொரு இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வது சாதாரண விஷயமல்ல. நம் கண் முன்னாலேயே வரலாறு உருவாக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
"சில நேரங்களில், ஒரு பயிற்சியாளராக நாம் ஒரு கடினமான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் அர்ஜென்டினாவிடம் மட்டும் தோற்கவில்லை, லியோனல் மெஸ்ஸியிடம் தோற்றோம். இறுதிப் போட்டியிலும் அவர் இதேபோன்று விளையாடினால், ஒட்டுமொத்த உலகமே கவலைப்பட வேண்டியிருக்கும்," என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications


