FIFA WC: கனடா - கத்தார் வீரர்கள் மோதல்.. உலகக் கோப்பை கால்பந்தில் பரபரப்பு.. என்ன நடந்தது?
வான்கூவர்: 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் பி பிரிவில் நடைபெற்ற கனடா மற்றும் கத்தார் அணிகளுக்கு இடையேயான போட்டியின் இறுதியில் இரு நாட்டு வீரர்களும் மைதானத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வான்கூவரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கனடா அணி 6-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி படுதோல்வி அடையச் செய்தது. கனடா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கத்தார் வீரர்களின் முரட்டுத்தனமான ஆட்டத்தால் ஆட்டத்தில் பதற்றம் நிலவியது. போட்டி முடிந்து இறுதி விசில் ஊதிய பிறகு இரு அணியின் வீரர்களும் மைதானத்தில் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர்.

நிலைமை மோசமடைந்ததை அடுத்து, கனடா பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ் மற்றும் கத்தார் பயிற்சியாளர் ஜூலென் லோபடேகி ஆகியோரும் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டியின் போது கத்தார் வீரர் அசிம் மடிபோ ஆபத்தான முறையில் பந்தை தடுக்க முயன்றார். அதனால் கனடாவின் இஸ்மாயில் கோனேவின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக ஸ்ட்ரெச்சரில் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் அசிம் மடிபோவிற்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே முதல் பாதியில் ஹோமம் அகமது சிவப்பு அட்டை பெற்று வெளியேறிய நிலையில், கத்தார் அணி 9 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. கத்தார் வீரர்களின் ஆட்டம் தாக்குதல் பாணியில் இருந்ததே இந்த மோதலுக்கு காரணமாக அமைந்தது.
இப்போட்டியில் கனடா வீரர் ஜொனாதன் டேவிட் 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக ஹாட்ரிக் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். கைல் லாரின் மற்றும் நாதன் சாலிபா தலா ஒரு கோல் அடித்தனர். கத்தாரின் முகமது மனாய் தவறாக ஒரு சுய கோல் (Own Goal) அடித்தார்.
கனடாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நேரில் காண அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி, பிபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுடன் மைதானத்திற்கு வந்திருந்தார். இந்த அபார வெற்றியின் மூலம் கனடா அணி தனது முதல் உலகக் கோப்பை வெற்றியை பதிவு செய்ததோடு, அடுத்த சுற்றுக்கான தனது வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
விளையாட்டின் உணர்வைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்த இந்த மோதல் சம்பவம் குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட இரு நாட்டு வீரர்கள் மற்றும் முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கத்தார் அணிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியைக் கொண்டாடும் அதே வேளையில், தங்களது முக்கிய வீரரின் காயம் அந்த அணிக்கு அடுத்த சுற்றுப் போட்டிகளில் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கவலையும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
