ஹாலாண்ட் இரட்டை கோல்.. செனகலை 3-2 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நார்வே
நியூஜெர்சி: பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் ஐ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில், செனகல் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நார்வே அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் நார்வே கேப்டன் எர்லிங் ஹாலாண்ட் இரட்டை கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டத்தின் முதல் பாதியிலேயே நார்வே அணி அபாரமாக ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் செனகல் தற்காப்பு வீரர் கலிடோ குலிபாலி செய்த தவற்றைப் பயன்படுத்திய நார்வேவின் மார்கஸ் பெடர்சன், ஒரு கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியின் 48வது நிமிடத்தில், மார்ட்டின் ஒடேகார்ட் கொடுத்த அருமையான பாஸை பெற்றுக்கொண்ட எர்லிங் ஹாலாண்ட், பந்தை கோல் போஸ்ட்டின் மேல் மூலைக்கு அனுப்பி நார்வேவின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் செனகல் வீரர் இஸ்மைலா சார் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 2-1 என மாற்றினார்.
ஆனால், அடுத்த 5வது நிமிடத்தில் பேட்ரிக் பெர்க்கின் கிராஸ் பந்தை ஹாலாண்ட் துல்லியமாக வாலி ஷாட் மூலம் கோலாக மாற்றி நார்வேவுக்கு 3-1 என முன்னிலை பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் இஸ்மைலா சார் செனகல் அணிக்காக மற்றொரு கோல் அடித்த போதிலும், நார்வே அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நார்வே அணி குரூப் ஐ பிரிவில் 6 புள்ளிகளுடன் பிரான்ஸ் அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஹாலாண்ட் இதுவரை விளையாடிய 2 உலகக் கோப்பை போட்டிகளில் 4 கோல்களை அடித்து தங்கக் காலணி விருதுக்கான போட்டியில் முன்னிலையில் உள்ளார். நார்வே அணி தனது அடுத்த போட்டியில் ஜூன் 27 அன்று பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications
