உலகக்கோப்பையை கொடுத்து விட்டு டொனால்ட் டிரம்ப் செய்த செயல்.. ரசிகர்கள் விளாசல்.. இதே வேலையாப் போச்சு
நியூயார்க்: அமெரிக்காவின் நியூஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 உலகக்கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்பெயின் அணி வீரர்களிடம் கோப்பையை கொடுத்த பிறகும் மேடையை விட்டு நகர மறுத்தார். அதனால் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டது. உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் டிரம்ப் செய்த செயலை விமர்சித்தும், கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இந்த இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீரர் பெரான் டோரஸ் அடித்த அசத்தலான கோலால், அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தனது இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது. இந்தப் போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோர் மைதானத்திற்குள் நுழைந்தனர். அப்போது மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் டொனால்ட் டிரம்பிற்கு எதிராகப் பலத்த கூச்சலிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, வீரர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பின்னர், உலகக்கோப்பையை ஸ்பெயின் கேப்டன் ரோட்ரியிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் வழங்கினார். கோப்பையைப் பெற்றுக் கொண்ட ஸ்பெயின் வீரர்கள் மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஆனால், கோப்பையை வழங்கிய டொனால்ட் டிரம்ப் அங்கிருந்து நகரமால், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு நடுவிலேயே தொடர்ந்து நின்றுகொண்டிருந்தார்.
ஸ்பெயின் வீரர்கள் சுதந்திரமாகத் தங்களது வெற்றிக் கொண்டாட்டத்தை அரங்கேற்ற வழிவிட்டு, டொனால்ட் டிரம்பை அங்கிருந்து நகருமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். அதன் பின்னரே அவர் மேடையை விட்டு சற்று தள்ளி நகர்ந்தார். இந்த தர்மசங்கடமான தருணம் மற்றும் ரசிகர்கள் அவருக்கு எதிராகக் கூச்சலிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
முன்னதாக, இதேபோல் செல்சி (Chelsea) அணி கிளப் உலகக்கோப்பையை வென்ற போதும் டொனால்ட் டிரம்ப் மேடையை விட்டு நகர மறுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய 2026 கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியின் வரலாற்று வெற்றி ஒருபுறம் இருக்க, பரிசளிப்பு விழாவில் டொனால்ட் டிரம்ப் செய்த இந்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications

