உலகக்கோப்பை கால்பந்து.. ஆஸ்திரியாவை ஒரு கோல் கூட அடிக்கவிடலை.. 3 கோல் அடித்து வென்ற ஸ்பெயின்
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், ஆஸ்திரிய அணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் செய்து 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின் அணி. இதன் மூலம் ஸ்பெயின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் மிகைல் ஒயர்சாபல் இரட்டை கோல் அடித்து ஸ்பெயினின் வெற்றியை எளிதாக்கினார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சோஃபி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணி பந்தை அதிகம் தன் வசம் வைத்து ஆதிக்கம் செலுத்தியது. இப்போட்டியை ஹாலிவுட் பிரபலங்களான பெனிலோப் குரூஸ், ஜேவியர் பார்டெம் உள்ளிட்ட பலர் நேரில் கண்டுகளித்தனர். ஆட்டத்தின் ஆரம்பத்தில் மார்க் குகுரெல்லா அடித்த கோல், பவ் குபார்சி ஆஃப்சைடு பகுதியில் இருந்ததால் நடுவரால் மறுக்கப்பட்டது. பின்னர், ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் குகுரெல்லா கொடுத்த துல்லியமான கிராஸை பயன்படுத்தி மிகைல் ஒயர்சாபல் முதல் கோல் அடித்து ஸ்பெயினுக்கு 1-0 என முன்னிலை தந்தார்.

இரண்டாவது பாதியில் ஆஸ்திரியா அணி மாற்று வீரர்களைக் களம் இறக்கி ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வர முயன்றது. முன்னதாக, அலெக்ஸ் பேனா அடித்த ஃபிரீ கிக் பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் அலெக்ஸ் பேனா கொடுத்த பாஸை பயன்படுத்தி பெட்ரோ போரோ ஹெட்டர் மூலம் கோல் அடித்தார். இது ஸ்பெயின் அணிக்காக அவர் அடித்த முதல் கோலாகும். தொடர்ந்து ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்தபோது (89-வது நிமிடம்), குகுரெல்லா கொடுத்த துல்லியமான கிராஸை மீண்டும் ஒயர்சாபல் அழகிய கோலாக மாற்றி ஸ்பெயினின் 3-0 என்ற வெற்றியை உறுதி செய்தார்.
ஸ்பெயின் அணியின் இளம் வீரர் லமின் யமால் ஆட்டத்தின் பல இடங்களில் ஆஸ்திரிய தடுப்பாட்டத்தை நிலைகுலையச் செய்தார். இந்த அபார வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி தனது அடுத்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை டல்லாஸ் நகரில் திங்கட்கிழமை எதிர்கொள்ளவுள்ளது.


Click it and Unblock the Notifications
