உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்ப 400 இணையதளங்களுக்கு தடை!
டெல்லி: உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்புவதற்கு 400 இணையதளங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு சோனி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கால்பந்து போட்டியை ஒளிபரப்பு செய்யும் 400 இணைய தளங்களுக்கு தடைவிதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் எம்.எஸ்.எம். (மல்டி ஸ்கிரீன் மீடியா) சார்பில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது.

அதிகாரப்பூர்வ உரிமை
அதில், ''கால்பந்து போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பு செய்ய எங்களுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வ உரிமை உள்ளது. ஆனால், இணையதளங்களில் வரம்பு மீறப்பட்டுள்ளது'' எனக் கூறப்பட்டிருந்தது.

இணைய தளங்களுக்குத் தடை
இந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி காமேஷ்வர் ராவ், எம்.எஸ்.எம். நிறுவனம் குறிப்பிட்டுள்ள இணையதளங்களின் சேவையை முடக்க, பல்வேறு இணைய சேவை வழங்குபவர்களுக்கு (ஐ.எஸ்.பி.) உத்தரவிட்டார்.

ஒளிபரப்ப கூடாது
மேலும், இந்தியாவில், அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமைகளை மீறும் விதமாக மற்ற இணையதளங்கள் எதுவும் ஒளிபரப்பு செய்வதை இனி கண்டுபிடித்தால் அதனையும் தடை செய்யவும் உத்தரவிட்டார்.

உத்தரவின் நகல்
இந்த உத்தரவின் நகலை தொலைத்தொடர்பு துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அனுப்ப பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது. விதிகளை மீறிய இணையதளங்களின் சேவையை தடை செய்வது குறித்து இத்தகைய துறைகளே, இணைய சேவை வழங்குநர்களுக்கு உத்தரவிடமுடியும்.
மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இணையதளம் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications