ஃபீஃபா உலகக் கோப்பை: நடப்பு சாம்பியன் ஸ்பெயின் வெளியேற காரணம் என்ன?
ரியோடி ஜெனிரோ: நடப்பு சாம்பியனான ஸ்பெயின் ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் முதல் சுற்றிலேயே வெளியேறியதற்கான காரணங்களை பார்ப்போம்.
2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் ஸ்பெயின் அசத்தலாக விளையாடி கோப்பையை வென்றது. இதையடுத்து தற்போது பிரேசிலில் நடந்து வரும் ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளில் ஸ்பெயின் துவக்கத்தில் இருந்தே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முதல் போட்டியில் நெதர்லாந்துடன் மோதி 5-1 என்ற கோல் கணக்கில் தோற்ற ஸ்பெயின் இரண்டாவது போட்டியில் சிலியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியது. நடப்பு சாம்பியனான ஸ்பெயின் இப்படி படுதோல்வி அடைய என்ன காரணம் என்று பார்ப்போம்.

தவறான முடிவுகள்
நெதர்லாந்திடம் தோல்வி அடைந்த பிறகு ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் வீரர்கள் ஜாவி ஹெர்னான்டஸ் மற்றும் ஜெரார்ட் பிக் ஆகியோரை நீக்கிவிட்டு பெட்ரோ ரோட்ரிகஸ் மற்றும் ஜாவி மார்டினஸ் ஆகியோரை அணியில் சேர்த்தார். இதை அவர் முன்பே செய்திருக்க வேண்டும். பரபரவென விளையாடும் கோகே காலதாமதமாக அணியில் சேர்க்கப்பட்டார். ஐகர் கசிலாஸ் மீது அதீத நம்பிக்கை வைத்தது மிகப் பெரிய தவறாகிவிட்டது.

தற்காப்பு
2010ம் ஆண்டு நடந்த ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளிலும் சரி, யூரோ 2012 போட்டிகளிலும் சரி ஸ்பெயினின் தற்காப்பு ஆட்டம் அசத்தலாக இருந்தது. ஆனால் 2014ம் ஆண்டு ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகளில் ஸ்பெயினின் தற்காப்பு ஆட்டம் சரியில்லை. தற்காப்பு ஆட்டம் சரியில்லாததால் 2 போட்டிகளில் எதிர் அணிகளை 7 கோல்கள் அடிக்கவிட்டுள்ளது. முன்பு தடுப்பாளர்களான பிக் மற்றும் செர்ஜியோ ரமோஸ் ஜோடி சேர்ந்து அசத்தினார்கள். ஆனால் இம்முறை அவர்கள் ஜோடி சேர்ந்து தடுப்பாளர்களாக செயல்படவில்லை.

டீகோ காஸ்டா
முன்வரிசையில் விளையாடிய டீகோ காஸ்டாவை தேர்வு செய்தது தவறாகிவிட்டது. பிரேசிலைச் சேர்ந்த காஸ்டா தங்கள் நாட்டு ஸ்டைலை பின்பற்ற வைக்க ஸ்பெயின் எந்த முயற்சியும் செய்யவில்லை. சிலியுடனான போட்டியின் போது காஸ்டா திக்குமுக்காடிவிட்டார்.

புதுமை
ஸ்பெயின் பழைய முறைகளின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தது தவறு. பழைய ஆட்ட முறைகளால் முன்பு வெற்றி கிடைத்திருந்தாலும் தற்போது அது உதவவில்லை. காலத்திற்கேற்ப புதிய விளையாட்டு முறைகளை பின்பாற்றாததும் ஸ்பெயின் படுதோல்வி அடைந்ததற்கு ஒரு காரணம். சிலியுடன் விளையாடியபோது ஸ்பெயினால் ஒழுங்காக பந்தை பாஸ் செய்ய முடியவில்லை, எதிர் அணியிடம் இருந்து பந்தை பெற முடியவில்லை.

தென்னமெரிக்கா
ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க கண்டத்தில் விளையாடி வெற்றி பெறுவது என்பது ஒரு சவாலாகவே இருந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரில் உள்ள மரகானா அரங்கில் நடந்த கான்பெடரேஷன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் பிரேசிலிடம் தோல்வி அடைந்தது. அதில் இருந்து ஸ்பெயினுக்கு தோல்வி மேல் தோல்விகள் தான். சிலியுடன் ஸ்பெயின் மோதிய போட்டியில் தென்னமெரிக்க நாடான பிரேசிலைச் சேர்ந்தவர்கள் மற்றொரு தென்னமெரிக்க நாடான சிலிக்கு ஆதரவளித்தனர்.


Click it and Unblock the Notifications