FIFA உலககோப்பை பைனல் முடிந்த உடன் துவா செய்த ஸ்பெயின் வீரர் யமால்.. மோதலில் ஈடுபட்ட அர்ஜென்டினா
நியூயார்க்: 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இருப்பினும், போட்டி முடிந்த பிறகு இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ் மற்றும் ஸ்பெயினின் காவி ஆகியோருக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் வெடித்தது.
ஆட்டம் முடிந்ததற்கான இறுதி விசில் ஊதப்பட்ட உடனேயே இந்த மோதல் தொடங்கியது. பரேடெஸ் மற்றும் காவி இடையே ஏற்பட்ட மோதலைக் கண்டு இரு அணிகளின் வீரர்களும் உடனடியாகத் தலையிட்டு சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மிகுந்த ஏமாற்றத்துடன் தூரத்திலிருந்து இதனைப் பார்த்துக் கொண்டு நின்றார்.

மறுபுறம், ஸ்பெயினின் இளம் நட்சத்திரமான லாமின் யமால் தனது அணியின் வரலாற்று வெற்றியை இறைவனுக்கு நன்றி செலுத்தி கொண்டாடினார். மைதானத்தில் சக வீரர்களுக்கு இடையே மோதல் நடந்து கொண்டிருந்த போதிலும், யமால் முழங்காலிட்டு இருக்கைகளும் ஏந்தி இறைவனிடம் துவாவில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மெட்லைஃப் மைதானத்தில் 80,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஸ்பெயின் அணியின் ஆதிக்கம் நிறைந்த ஆட்டத்திற்கு இணையாக அர்ஜென்டினாவால் விளையாட முடியவில்லை. மேலும், ஆட்டத்தின் 93-வது நிமிடத்தில் ஸ்பெயினின் பாவ் குபார்சி மீது கடுமையான ஃபவுல் செய்ததற்காக அர்ஜென்டினாவின் என்ஸோ பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இது அர்ஜென்டினா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
அர்ஜென்டினா அணியின் தாக்குதல் ஆட்டம் பலவீனமாக இருந்தபோதிலும், அதன் தடுப்பாட்டம் மற்றும் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸின் சிறப்பான செயல்பாடுகளால் ஸ்பெயின் அணியின் பல கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. எனினும், கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் ஸ்பெயின் அணி தனது தொடர் முயற்சிகளுக்குப் பலன் கண்டது.
ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய நிக்கோ வில்லியம்ஸ் கொடுத்த பந்தை, மற்றொரு மாற்று வீரரான ஃபெரான் டோரஸ் மிக நேர்த்தியாக கோலாக மாற்றி ஸ்பெயினுக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் வீரர்கள் மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட, லியோனல் மெஸ்ஸி கண்ணீருடன் தனது ரன்னர்-அப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். இந்த பரிசளிப்பு விழாவில் ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் கலந்து கொண்டனர். டொனால்ட் டிரம்ப் மைதானத்திற்குள் நுழைந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்களில் ஒரு பகுதியினர் அவருக்கு எதிராகக் கூச்சலிட்டனர்.


Click it and Unblock the Notifications

