ஃபிஃபா உலககோப்பை கால்பந்து.. அர்ஜென்டினா மாபெரும் சாதனை.. பிரேசில் ரெக்கார்ட் சமன்
அட்லாண்டா: பிஃபா உலகக் கோப்பை தொடரின் ஒரே சீசனில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக பிரேசில் படைத்திருந்த உலக சாதனையை, அர்ஜென்டினா அணி தற்போது சமன் செய்துள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் 7 போட்டிகளில் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை அர்ஜென்டினா பெற்றுள்ளது.
அட்லாண்டாவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 2026-ன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா, ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்தை எதிர்கொண்டு 2-1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. போட்டியின் 55-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் அந்தோணி கார்டன் கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை பெற்றுத் தந்தார்.

ஆனால், ஆட்டத்தின் 85 மற்றும் 92வது நிமிடங்களில் முறையே அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் மற்றும் லவுதாரோ மார்டினெஸ் ஆகியோர் கோல் அடித்து அசத்தினர். இதனால் அர்ஜென்டினா அணி அபாரமாக மீண்டு வந்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான இந்த அரையிறுதி வெற்றி, நடப்பு உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் ஏழாவது நேரடி வெற்றியாகும். இதன் மூலம், பிஃபா உலகக் கோப்பையின் ஒரே தொடரில் ஒரு அணி பெற்ற அதிகபட்ச வெற்றிகள் என்ற பிரேசிலின் உலக சாதனையை அர்ஜென்டினா சமன் செய்துள்ளது. முன்னதாக 2002 உலகக் கோப்பையில், பிரேசில் அணி தான் விளையாடிய 7 போட்டிகளிலும் வழக்கமான ஆட்ட நேரம் மற்றும் கூடுதல் நேரத்திற்குள் வெற்றி பெற்று இச்சாதனையை படைத்திருந்தது.
உலகக் கோப்பையின் ஒரே தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளின் பட்டியலில் 2002-ல் பிரேசில் மற்றும் 2026-ன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள அர்ஜென்டினா ஆகியவை தலா 7 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக 1970 உலகக் கோப்பையில் பிரேசில் அணி 6 வெற்றிகளைப் பெற்றிருந்தது. மேலும், 1974ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனி , 1986ஆம் ஆண்டு அர்ஜென்டினா , 1990ஆம் ஆண்டு இத்தாலி , 1998 மற்றும் 2018ஆம் ஆண்டு பிரான்ஸ், 2010ஆம் ஆண்டு ஸ்பெயின், நெதர்லாந்து அணிகளும், 2014ஆம் ஆண்டு ஜெர்மனிமற்றும் 2018ஆம் ஆண்டு பெல்ஜியம் ஆகிய அணிகள் தலா 6 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.
நடப்பு உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி 6 வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடனும், பிரான்ஸ் அணி 6 வெற்றிகளுடனும் இப்பட்டியலில் இணைந்து தங்களது முத்திரையைப் பதித்துள்ளன.அர்ஜென்டினா அணி 2026 பிஃபா உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணியாக அர்ஜென்டினா திகழ்கிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அவர்களை எதிர்கொள்ளும் ஸ்பெயின் அணி, கேப் வெர்டேவுக்கு எதிரான டிரா உட்பட 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது. நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினை வீழ்த்தினால், உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே தொடரில் 8 போட்டிகளில் வென்ற முதல் அணி என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைக்கும்.
ஒருவேளை ஸ்பெயின் அணி பெனால்டி ஷூட்-அவுட் இன்றி அர்ஜென்டினாவை வீழ்த்தினால், அது பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவின் அதிகபட்ச வெற்றிகள் சாதனையை சமன் செய்யும்.இந்த உலகக் கோப்பையின் அனைத்து 7 போட்டிகளிலும் 39 வயதான நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். குரூப் ஜே பிரிவில் அல்ஜீரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த மெஸ்ஸி, அடுத்ததாக ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் இரட்டை கோல் அடித்து அசத்தினார்.
ஜோர்டானுக்கு எதிரான கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் மாற்று ஆட்டக்காரராக களம் கண்ட அவர், 80-வது நிமிடத்தில் கோல் அடித்து அணி 3-1 என வெற்றி பெற உதவினார்.ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் கேப் வெர்டேவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து 3-2 என்ற கணக்கில் அணி வெற்றி பெற உதவினார். தொடர்ந்து எகிப்துக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் ஒரு கோல் அடித்ததோடு, கிறிஸ்டியன் ரொமேரோ கோல் அடிக்க ஒரு அசிஸ்ட்டும் வழங்கினார்.


Click it and Unblock the Notifications

