உலகக்கோப்பை கால்பந்து தொடரில் புதிய சாதனையுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது கேப் வெர்டே
ஹூஸ்டன்: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரின் லீக் போட்டியில், சவுதி அரேபியாவுக்கு எதிரான போட்டியை 0-0 என டிரா செய்த அறிமுக அணியான கேப் வெர்டே, புதிய வரலாறு படைத்து ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஹூஸ்டனில் நடைபெற்ற இப்போட்டியில் பெற்ற ஒரு புள்ளியின் மூலமும், மற்றொரு போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என உருகுவேயை வீழ்த்தியதாலும், கேப் வெர்டே அணி குரூப் H பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
உலகக்கோப்பைக்கு முன்பாக உலகத் தரவரிசையில் 67-வது இடத்தில் இருந்த கேப் வெர்டே அணி, லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் அசத்தியுள்ளது. ஸ்பெயினுடன் 0-0 எனவும், உருகுவேயுடன் 2-2 எனவும் டிரா செய்த இந்த அணி, தற்போது சவுதி அரேபியாவுடனும் டிரா செய்துள்ளது. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் சற்று அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய தீவு நாடு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. லீக் சுற்றின் முடிவில் ஸ்பெயின் 7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. கேப் வெர்டே 3 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற, உருகுவே மற்றும் சவுதி அரேபியா தலா 2 புள்ளிகளுடன் வெளியேறின.

இப்போட்டியில் கேப் வெர்டே அணியின் பயிற்சியாளர் புபிஸ்டா பல மாற்றங்களைச் செய்த போதிலும், 40 வயது அனுபவ கோல்கீப்பர் வோசின்ஹாவை அணியில் தக்க வைத்தார். ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் சவுதி அரேபியாவின் அனுபவ டிஃபெண்டர் ஹசன் அல்-தம்பக்தி காயமடைந்து மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
கேப் வெர்டே வீரர்களான வில்லி செமெடோ, ஜமிரோ மான்டீரோ மற்றும் கெவின் பினா ஆகியோருக்கு கோல் அடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அதைத் தவறவிட்டனர். ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் லாரோஸ் துவார்டே அடித்த பந்தை சவுதி கோல்கீப்பர் முகமது அல்-ஓவைஸ் தடுத்து நிறுத்தினார்.
ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள கேப் வெர்டே அணி, ஜூலை 3 அன்று மியாமியில் நடைபெறவுள்ள ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் நடப்பு சாம்பியனான மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்ளவுள்ளது.


Click it and Unblock the Notifications

