52 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு.. உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த காங்கோ
நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரில், காங்கோ ஜனநாயக குடியரசு அணி 3-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 52 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள காங்கோ அணி, உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக நாக்கவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை காங்கோ எதிர்கொள்கிறது.
முன்னதாக 1974-ல் ஜைர் என்ற பெயரில் விளையாடிய காங்கோ அணி, 52 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பைத் தொடரில் மீண்டும் பங்கேற்றது. இந்த நிலையில் அடுத்த சுற்றுக்கு காங்கோ அணி முன்னேறி உள்ளது மறக்க முடியாத தருணமாக அமைந்தது. குரூப் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை 1-1 என டிரா செய்து காங்கோ அசத்தியிருந்தது. தற்போது லீக் சுற்றுகளின் முடிவில் 4 புள்ளிகளுடன் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

அட்லாண்டாவில் நடைபெற்ற இப்போட்டியின் 10-வது நிமிடத்திலேயே உஸ்பெகிஸ்தான் அணியின் கேப்டன் எல்டோர் ஷோமுரோடோவ் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் காங்கோவின் நாதனியேல் முபுகு அடித்த கோல், ஃபவுல் காரணமாக நடுவர்களால் ரத்து செய்யப்பட்டது. இதனால் முதல் பாதியில் உஸ்பெகிஸ்தான் 1-0 என முன்னிலை வகித்தது.
ஆனால், இரண்டாவது பாதியில் காங்கோ அணி அதிரடியாக மீண்டெழுந்தது. ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி காங்கோவின் யோன் விசா முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் மெஷாக் எலியா கொடுத்த பாஸைப் பெற்று ஃபிஸ்டன் மயேலே மற்றொரு கோல் அடிக்க, காங்கோ 2-1 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் யோன் விசா தனது இரண்டாவது கோலை அடித்து 3-1 என்ற கணக்கில் காங்கோவின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றிக்குப் பின் காங்கோ வீரர்கள் மைதானத்தின் நடுவே மண்டியிட்டு பிரார்த்தனை செய்து ரசிகர்களுடன் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர். உலகக்கோப்பையில் முதல் முறையாகப் பங்கேற்ற உஸ்பெகிஸ்தான் அணி 3 தோல்விகளுடன் வெளியேறியது. அடுத்த சுற்றில், குரூப் எல் பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணியை காங்கோ எதிர்கொள்ளவுள்ளது.


Click it and Unblock the Notifications
