ஃபிஃபா உலககோப்பை பைனலில் முதல் முறை.. அர்ஜென்டினா, ஸ்பெயின் கடந்து வந்த பாதை
நியூயார்க்: 2026 உலககோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு மகத்தான வரலாற்று சம்பவம் நடக்க உள்ளது. அதாவது, 2024 ஆம் ஆண்டின் யூரோ கோப்பை சாம்பியனான ஸ்பெயின் மற்றும் 2024 கோப்பா அமெரிக்கா சாம்பியனான அர்ஜென்டினா ஆகிய இரு அணிகளும், 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் மோதவுள்ளன.
இரு அணிகளும் இதுவரை உலககோப்பை பைனலில் சந்தித்தது கிடையாது. 1966ஆம் அண்டு ஃபிபா உலககோப்பை லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரு முறை மோதி இருந்தது. அதில், அர்ஜென்டினா 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வென்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்த இரு அணிகளின் வெற்றிகள், உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக தற்போதைய ஐரோப்பிய சாம்பியனும், கோப்பா அமெரிக்கா சாம்பியனும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சூழலை உருவாக்கியுள்ளன. இதற்கு முன்னதாக ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவின் தற்போதைய சாம்பியன் அணிகள் இறுதிப் போட்டியில் மோதியதே இல்லை. வரும் ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை அன்று நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் இந்த புதிய வரலாறு உருவாக உள்ளது.
இந்த உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி தனது நேர்த்தியான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றிகள் மற்றும் ஒரு டிராவுடன் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், ஒட்டுமொத்த தொடரிலும் ஸ்பெயின் அணி தனக்கு எதிராக ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின் அணி தனது உலகக் கோப்பை பயணத்தை குரூப் ஹெச் பிரிவில் தொடங்கியது. ஜூன் 15 அன்று கேப் வெர்டேவுக்கு எதிரான முதல் போட்டி 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. தொடர்ந்து ஜூன் 21 அன்று சவுதி அரேபியாவை 4-0 என்ற கணக்கிலும், ஜூன் 26 அன்று உருகுவேவை 1-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. பின்னர் ஜூலை 2 அன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 32-வது சுற்றில் ஆஸ்திரியாவை 3-0 என்ற கணக்கிலும், ஜூலை 6 அன்று நடைபெற்ற ரவுஙணட் ஆஙப 16 சுற்றில் போர்ச்சுகலை 1-0 என்ற கணக்கிலும் வென்றது.
அதைத்தொடர்ந்து ஜூலை 10 காலிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை 2-1 என்ற கணக்கிலும், ஜூலை 14 அன்று நடைபெற்ற அரையிறுதியில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம், அர்ஜென்டினா அணி இந்த தொடரில் நூறு சதவீத வெற்றி சாதனையை தன்வசம் வைத்துள்ளது. விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள அந்த அணி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் களம் இறங்குகிறது.
குரூப் ஜே பிரிவில் களம் கண்ட அர்ஜென்டினா அணி, ஜூன் 16 அன்று அல்ஜீரியாவை 3-0 என்ற கணக்கிலும், ஜூன் 22 அன்று ஆஸ்திரியாவை 2-0 என்ற கணக்கிலும், ஜூன் 27 அன்று ஜோர்டானை 3-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி அசத்தியது. பின்னர் ஜூலை 3 அன்று நடைபெற்ற ரவுண்ட் ஆர் 32 சுற்றில் கேப் வெர்டேவை 3-2 என்ற கணக்கிலும், ஜூலை 7 அன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்றில் எகிப்தை 3-2 என்ற கணக்கிலும் போராடி வென்றது. அதற்கடுத்து ஜூலை 11 அன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை 3-1 என்ற கணக்கிலும், ஜூலை 15 அன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
ஸ்பெயின் அணி இந்த உலகக் கோப்பையில் மிகக் குறைந்த கோல்களை, வெறும் ஒரே ஒரு கோல் மட்டுமே எதிரணியை அடிக்கவிட்ட நிலையில், அர்ஜென்டினா அணி மிக அதிகமாக 19 கோல்கள் அடித்து, அதிக கோல்களை அடித்த அணிகளின் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.இந்த தொடரில் அர்ஜென்டினா அடித்த 19 கோல்களில், 8 கோல்களை கேப்டன் லியோனல் மெஸ்ஸி மட்டுமே அடித்துள்ளார். இதுதவிர, 4 கோல்கள் அடிப்பதற்கும் அவர் அசிஸ்ட் செய்துள்ளார். இதில் இரண்டு அசிஸ்ட்கள் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் போது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

