பனாமாவுக்கு எதிராக கடைசி நிமிடத்தில் கோல்.. கானா அணி 1-0 என உலகக் கோப்பையில் த்ரில்லர் வெற்றி!
டொராண்டோ: உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் எல் பிரிவு லீக் ஆட்டத்தில், கடைசி நிமிடத்தில் கேலப் யிரென்கி அடித்த அதிரடி கோலால் பனாமாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி கானா அணி வெற்றி பெற்றுள்ளது.
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பிஎம்ஓ ஃபீல்டு மைதானத்தில் பலத்த மழைக்கு இடையே நடைபெற்ற இப்போட்டியில் கானா மற்றும் பனாமா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்கத் தீவிரமாகப் போராடினாலும், பின்கள வீரர்களின் பலமான தடுப்பாட்டத்தால் ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவை நோக்கி நகர்ந்தது.

ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே பனாமாவின் செசிலியோ வாட்டர்மேன் அடித்த பந்தை கானா கோல்கீப்பர் லாரன்ஸ் அதி-ஜிகி பாய்ந்து தடுத்துக் காப்பாற்றினார். ஆனால், எதிரணி வீரர்களுடன் ஏற்பட்ட மோதல்களில் அடிபட்டதால் அவர் முதல் பாதியிலேயே வெளியேற, பெஞ்சமின் அசாரே மாற்று கோல்கீப்பராகக் களமிறங்கினார். ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் கானாவின் பிராண்டன் தாமஸ்-அசான்டே கொடுத்த பாஸை ஜோர்டான் அயூ கோல் அடிக்க முயன்ற போது, பனாமா டிபெண்டர் ஜியோவானி ராமோஸ் பாய்ந்து தடுத்துக் காப்பாற்றினார்.
ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் நேரத்தின் 5வது நிமிடத்தில் (95வது நிமிடம்) கானாவின் பிராண்டன் தாமஸ்-அசான்டே பந்தை கோல் போஸ்ட் நோக்கி தட்டிவிட, அங்கு ஓடிவந்த கேலப் யிரென்கி அதை லாவகமாக கோலாக்கினார். இதனால் கானா அணி 1-0 என்ற கணக்கில் த்ரில்லர் வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இங்கிலாந்தில் பாலியல் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் கானாவின் நட்சத்திர மிட்பீல்டர் தாமஸ் பார்ட்டிக்கு கனடாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் இப்போட்டியில் விளையாடவில்லை.
இந்த வெற்றியின் மூலம் குரூப் எல் பிரிவில் கானா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நேற்று குரோஷியாவை 4-2 என வீழ்த்திய இங்கிலாந்து அணியும் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தோல்வியடைந்த பனாமா அணிக்கு இந்த கடைசி நிமிட தோல்வி பெரும் ஏமாற்றத்தை அளித்தது.


Click it and Unblock the Notifications
