உலககோப்பை பைனலுக்கு பிறகு ஓய்வு பெறுகிறாரா மெஸ்ஸி? சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு
நியூயார்க்: ஸ்பெயினுக்கு எதிரான ஃபிஃபா உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டிக்கு முன்னதாக, அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி தனது சக வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களுடன் இருக்கும் குழு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம், மெஸ்ஸி இன்று உடன் ஓய்வு பெற போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இறுதிப் போட்டிக்கு முன்னதாக, அர்ஜென்டினா கேப்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், அணியின் ஒற்றுமையை வெகுவாக வலியுறுத்தியுள்ளார்."கடந்த இத்தனை ஆண்டுகளில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த விஷயம் வெறும் பட்டங்கள் மட்டுமல்ல, நாம் கடந்து வந்த இந்தப் பாதை தான். இந்த குழுவுடன் ஒவ்வொரு நாளையும் பகிர்ந்து கொள்வது, இணைந்து போட்டியிடுவது, கடினமான தருணங்களில் ஒருவருக்கொருவர் துணையாக நின்று மீண்டு எழுவது மற்றும் ஒவ்வொரு அடியையும் ரசித்து மகிழ்வது தான் எனக்கு மிகவும் பிடித்தமானவை" என்று அந்தப் பதிவில் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

"எனது சக வீரர்கள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் இந்த தேசிய அணியை ஒரு குடும்பமாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். நாளை என்ன நடந்தாலும், இந்த குழு ஏற்கனவே யாராலும் மறக்க முடியாத, அழிக்க முடியாத ஒரு வரலாற்றை எழுதிவிட்டது" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த இறுதிப் போட்டியில் மெஸ்ஸி மற்றொரு மைல்கல்லையும் எதிர்நோக்கியுள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை மீண்டும் தன்வசப்படுத்த அவர் முயல்வார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தின் போது கைலியன் எம்பாப்பே இந்த சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதிப் போட்டியின் வெற்றி குறித்துப் பேசிய மெஸ்ஸி, அந்தத் தருணத்தின் உணர்ச்சிப்பூர்வமான தீவிரம் மற்றும் வெற்றியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். "நாங்கள் ஒரு தனித்துவமான தருணத்தை அனுபவித்தோம். தேசிய கீதம் இசைக்கப்பட்டதில் இருந்தே எங்களால் அதை உணர முடிந்தது. அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொண்டு மற்றொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது எவ்வளவு முக்கியமானது என்பதை ரசிகர்கள் அறிவார்கள் என்பதால், அவர்கள் இந்த வெற்றியைப் பெரிதும் விரும்பினர்.
அர்ஜென்டினா மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எனது தாயாரும் குடும்பத்தினரும் அங்கு மக்கள் கொண்டாடும் புகைப்படங்களை எனக்கு அனுப்பினர். அர்ஜென்டினா மக்களுக்கு இந்த சிறப்பான மகிழ்ச்சியை வழங்கியதில் நான் மிகுந்த பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்" என்று மெஸ்ஸி கூறினார்.
உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து லியோனல் மெஸ்ஸி ஓய்வு பெறுவாரா இல்லையா என்பதை அவர் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேபோல், இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி மெஸ்ஸியின் கடைசி சர்வதேச போட்டியாக இருக்குமா என்பது குறித்து அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனியும் எவ்வித கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications

