ஃபிபா உலககோப்பை கால்பந்து: ஸ்பெயின் அணிக்கு ரூ. 480 கோடி பரிசுத் தொகை.. மற்ற அணிக்கு எவ்வளவு?
நியூயார்க்: 2026 ஃபீஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் புதிய சாம்பியனாக முடிசூடியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் தனது மிகப்பெரிய கால்பந்து மகுடத்தையும், ஃபீஃபாவிடமிருந்து இந்திய ரூபாய் மதிப்பில் 480 கோடி ரூபாயும் பரிசு வழங்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கத்தாரில் வென்ற பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பை அர்ஜென்டினாவைத் தவறவிட்டாலும், ரன்னர்-அப் இடத்திற்கான மிகப்பெரிய தொகையைப் பெற்றுள்ளது. 2026 உலகக் கோப்பை வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பரிசுத் தொகையை வழங்கியுள்ளது. இதில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் அவை பிடித்த இடங்களின் அடிப்படையில் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஃபீஃபா உலகக் கோப்பை 2026-ஐ வென்றதற்காக ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இது ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு வழங்கப்படும் மிகப்பெரிய பரிசுத் தொகையாகும். இது 2022-இல் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றபோது பெற்ற தொகையை விட 8 மில்லியன் டாலர் அதிகமாகும்.
இறுதிப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்த அர்ஜென்டினாவுக்கு 33 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கிடைக்கும். இது 2022 ஃபீஃபா உலகக் கோப்பையில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் அணி பெற்ற தொகையை விட 3 மில்லியன் டாலர் அதிகமாகும்.
பரிசுத் தொகை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. மூன்றாவது இடத்தைப் பிடித்த இங்கிலாந்து அணிக்கு 29 மில்லியன் டாலரும், நான்காவது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் அணிக்கு 27 மில்லியன் டாலரும் வழங்கப்பட உள்ளன.
டிசம்பர் 2025 அறிவிப்பின்படி, 2026 ஃபீஃபா உலகக் கோப்பைக்கான மொத்த பரிசுத் தொகை 655 மில்லியன் டாலராகும். இது 2022 உலகக் கோப்பையின் மொத்த பரிசுத் தொகையை விட 50 சதவீதம் அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல், சுற்றுகளின் அடிப்படையில் மற்ற அணிகளுக்கான பரிசுப் பகிர்வும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 5 முதல் 8 வரையிலான இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 19 மில்லியன் டாலரும், 9 முதல் 16 வரையிலான இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 15 மில்லியன் டாலரும் வழங்கப்பட உள்ளன.
மேலும், 17 முதல் 32 வரையிலான இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 11 மில்லியன் டாலரும், உலகக் கோப்பையில் பங்கேற்று 33 முதல் 48 வரையிலான இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 9 மில்லியன் டாலரும் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.இறுதிப் போட்டியில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்கு எதிராக கடும் போராட்டத்திற்குப் பிறகு 1-0 என்ற கோல் கணக்கில் வென்று ஸ்பெயின் முதலிடத்தை எட்டியது.


Click it and Unblock the Notifications

