FIFA உலகக்கோப்பை காலிறுதிக்குக்கு தகுதி பெற்ற 8 அணிகள் எவை? முழு அட்டவணை மற்றும் நேரம்
நியூயார்க்: 2026 ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள 8 அணிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் நேரங்கள் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பல அதிர்ச்சிகரமான முடிவுகளும், உணர்ச்சிகரமான விடைபெறல்களும் அரங்கேறின. பிரேசிலை வீழ்த்தி நார்வேயும், போர்ச்சுகலை வீழ்த்தி ஸ்பெயினும் காலிறுதிக்கு முன்னேறின. இதன் மூலம் நெய்மர் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது.

அமெரிக்காவை 4-1 என பெல்ஜியமும், எகிப்துக்கு எதிராக 0-2 எனப் பின்தங்கியிருந்த அர்ஜென்டினா அணி மெஸ்ஸியின் அதிரடியால் 3-2 எனவும் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றன. கொலம்பியாவை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தி சுவிட்சர்லாந்து கடைசி அணியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
காலிறுதிப் போட்டிகள் அட்டவணை (இந்திய நேரப்படி):
பிரான்ஸ் - மொராக்கோ: ஜூலை 10 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1:30 மணிக்கு பாஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2022 உலகக்கோப்பை அரையிறுதித் தோல்விக்கு பழிவாங்க மொராக்கோ தயாராகி வருகிறது.
ஸ்பெயின் - பெல்ஜியம்: ஜூலை 11 (சனிக்கிழமை) நள்ளிரவு 12:30 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் மோதவுள்ளன.
நார்வே - இங்கிலாந்து: ஜூலை 11 (சனிக்கிழமை) அதிகாலை 2:30 மணிக்கு மியாமி மைதானத்தில் மோதவுள்ளன. நட்சத்திர வீரர்கள் எர்லிங் ஹாலண்ட் மற்றும் ஹாரி கேன் இடையேயான நேரடி மோதலாக இது பார்க்கப்படுகிறது.
அர்ஜென்டினா - சுவிட்சர்லாந்து: ஜூலை 12 (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:30 மணிக்கு கன்சாஸ் சிட்டி மைதானத்தில் மோதவுள்ளன. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவின் வெற்றிப் பயணம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் போட்டியாக இது உள்ளது.
நேரலை ஒளிபரப்பு விவரம்:
இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் இந்த உலகக்கோப்பை காலிறுதிப் போட்டிகளை 'யுனைட்8 ஸ்போர்ட்ஸ்' தொலைக்காட்சிகளில் நேரலையாகக் காணலாம். ஆன்லைனில் மொபைல் அல்லது கணினியில் பார்க்க விரும்புபவர்கள் 'ஜீ5' (ZEE5) ஓடிடி தளத்தில் நேரலை ஒளிபரப்பைக் கண்டு ரசிக்கலாம். உலகக்கோப்பையின் இறுதி கட்டத்தை நோக்கிப் போட்டிகள் நகர்வதால், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
