அர்ஜென்டினாவுக்கு சாதகமாக செயல்பட்ட நடுவர்.. இங்கிலாந்திடம் இருந்து வெற்றியைப் பறித்த 'ஃபிஃபா'
அட்லாண்டா: 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 2வது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், நடுவர் இஸ்மாயில் எல்ஃபாத் அர்ஜென்டினாவுக்குச் சாதகமாகச் செயல்பட்டு இங்கிலாந்து அணியின் வெற்றியைப் பறித்துவிட்டதாக உலகளவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
ஏற்கனவே, ஃபிஃபா அமைப்பு மற்றும் அதன் நடுவர்கள் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. 2022 உலகக்கோப்பையின் போது அரசல் புரசலாக பேசப்பட்ட இந்த விவகாரம், நடப்பு உலகக்கோப்பையில் பல ஆதரங்களுடன் ரசிகர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டினா வீரர்கள் 12 முறை முரட்டுத்தனமாக ஃபவுல் செய்தும், நடுவர் அவர்களுக்கு மஞ்சள் அட்டை காட்டாமல் தப்பவிட்டார். ஆட்டத்தின் 3வது நிமிடத்திலேயே அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ், இங்கிலாந்தின் எலியட் ஆண்டர்சனின் தலையில் பலமாகத் தாக்கியும் அவருக்கு எவ்வித கார்டும் வழங்கப்படவில்லை.
ஆனால், ஆட்டத்தின் முதல் ஃபவுலைச் செய்த இங்கிலாந்து அணியின் ஆண்டர்சனுக்கு நடுவர் உடனடியாக மஞ்சள் அட்டை காட்டியது இங்கிலாந்து வீரர்களைக் கொந்தளிக்கச் செய்தது. மேலும், அர்ஜென்டினாவின் ஜுலியானோ சிமியோன் முதல் பாதியில் 5 ஃபவுல்கள் செய்தும் கார்டு வாங்காமல் தப்பினார்.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் நடுவரின் முடிவுகள் அப்பட்டமான பகல் கொள்ளையாக இருந்தது என்று இங்கிலாந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 86வது நிமிடத்தில் அர்ஜென்டினா தனது முதல் கோலை அடித்தபோது, லியோனல் மெஸ்ஸி அப்பட்டமாக ஆஃப்சைடில் இருந்ததாக வீடியோ ஆதாரங்களுடன் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேபோல, கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினா அடித்த இரண்டாவது கோலின் போது, மெஸ்ஸி இங்கிலாந்தின் ஸ்பென்ஸை ஃபவுல் செய்த பிறகே பந்தை பாஸ் செய்தார் என்றும், அதை நடுவர் கண்டுகொள்ளவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
"இங்கிலாந்து அப்பட்டமாக ஏமாற்றப்பட்டுவிட்டது" என்று இணையத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்த நடுவர் முடிவுகள் 2026 கால்பந்து உலகக் கோப்பையின் மாபெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இனி உலகக்கோப்பையே நடத்த வேண்டாம், நேரடியாக அர்ஜென்டினாவுக்கு கோப்பையை கொடுத்து விடுங்கள் என பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
