"என் கோட்-ஐ கழட்டினா கோல் போட்ருவாங்க.. உலகக்கோப்பை பைனல் பார்க்க வரலை”.. அர்ஜென்டினா அதிபர் முடிவு
பியூனஸ் அயர்ஸ்: "நான் என் கோட்டை கழற்றினால் எதிரணி கோல் போட்டுவிடும்" என்ற வினோதமான சென்டிமென்ட் காரணமாக, ஸ்பெயினுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காண அமெரிக்கா வரப்போவதில்லை என்று அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மைலி முடிவு செய்துள்ளார்.
அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான 2026 கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டி அமெரிக்காவின் மெட்லைஃப் மைதானத்தில் ஜூலை 19 அன்று நடைபெற உள்ளது. இந்த முக்கிய போட்டியை நேரில் காண அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்படப் பல உலகத் தலைவர்கள் வரவுள்ள நிலையில், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மைலி தனது இல்லத்தில் இருந்தே ஆட்டத்தைப் பார்க்க முடிவு செய்துள்ளார்.

இதற்கு அவர் கூறும் காரணம் தான் மிகவும் வேடிக்கையானது. காலிறுதி ஆட்டத்தின் போது வெப்பம் அதிகமாக இருந்ததால், தான் அணிந்திருந்த ஜாக்கெட் கோட்-ஐ அவர் கழற்றியுள்ளார். உடனடியாக எதிரணி கோல் அடித்துள்ளது. பதறியடித்துக் கொண்டு அவர் மீண்டும் ஜாக்கெட் கோட்டை அணிந்ததும், அதன் பின் எதிரணி கோல் அடிக்கவில்லை. அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதனால் தனது கோட்டிற்கு ஒரு அசாத்திய ராசி இருப்பதாக அவர் நம்புகிறார்.
மேலும், அர்ஜென்டினா அதிபர்கள் யாருமே 1990 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு பின் தங்கள் அணி ஆடும் உலகக்கோப்பை போட்டிகளை பார்க்க நேரில் செல்வதில்லை. இதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியும் உள்ளது. கடந்த 1990 உலகக் கோப்பையில், அப்போதைய அர்ஜென்டினா அதிபர் கார்லோஸ் மெனெம் வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய பிறகு, பலவீனமான கேமரூனிடம் அர்ஜென்டினா 0-1 எனத் தோற்றது. இதனால் அவர் 'ராசியில்லாதவர்' என்று முத்திரை குத்தப்பட்டார்.
அதன் பிறகு அர்ஜென்டினாவின் எந்தவொரு அதிபரும் உலகக் கோப்பை போட்டிகளை நேரில் சென்று பார்ப்பதில்லை. 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அர்ஜென்டினா கோப்பையைத் தக்கவைக்கப் போராடும் நிலையில், இந்த 'காபாலா' சென்டிமென்டை உடைக்க அதிபர் ஜேவியர் மைலி தயாராக இல்லை என கூறப்படுகிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக அர்ஜென்டினாவில் 'காபாலா' என்ற ஆன்மீக மற்றும் கலாச்சார நம்பிக்கைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு. இது ஒரு சடங்கு போன்ற சென்டிமென்ட் நம்பிக்கையாகும். ரசிகர்கள் மற்றும் வீரர்கள் தங்களது குறிப்பிட்ட பழக்கவழக்கங்கள், ஆடைகள் அல்லது செயல்கள் மூலமாகத் தங்களது அணியின் வெற்றியைத் தீர்மானிக்க முடியும் என்று தீவிரமாக நம்புகின்றனர். இது கால்பந்து விளையாட்டின் மீதான அவர்களின் அசைக்க முடியாத வெறியைக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications
