கால்பந்து: 6வது உலகக் கோப்பைக்கு பிரேசில் ஆயத்தம்!
By Chakra
oi-Akkhan
ஜோஹன்னஸ்பர்க்: உலகக் கால்பந்து வரலாற்றில் தனக்கென தனியிடத்தை ஏற்படுத்தி ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பிரேசில் அணி, 6வது முறையாக உலகக் கோப்பையை வெல்வதற்காக தென் ஆப்பிரிக்காவில் காலடி எடுத்து வைத்துள்ளது.
உலகக் கோப்பை வரலாற்றில் பிரேசில் அணிக்கு தனி இடம் உண்டு. இதுவரை அந்த அணி 5 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இது யாரும் இதுவரை படைத்திராத ஒரு சாதனையாகும். பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் உள்ள இத்தாலி 4 முறை கோப்பையை வென்றுள்ளது.
உலகத் தர வரிசையில் முதலிடத்தில் இருப்பதும் பிரேசில்தான். அடுத்த இடத்தில் ஸ்பெயினும், 3வது இடத்தில் போர்ச்சுகலும் உள்ளன.
நெதர்லாந்து 4, இத்தாலி 5, ஜெர்மனி 6, அர்ஜென்டினா 7, இங்கிலாந்து 8, பிரான்ஸ் 9, குரோஷியா 10வது இடத்திலும் உள்ளன.
உலக அளவில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட அணிகள் - பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகியவை. மற்ற அணிகளிலும் பல ஸ்டார் வீரர்கள் உள்ளன. ஆனால் இந்த அணிகளே ஸ்டார் அணிகளாக உள்ளதுதான் விசேஷமானது.
பிரேசில் அணியின் கேப்டனாக இருந்து பல வெற்றிகளைக் குவித்தவரான துங்கா தான் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். கேப்டன் லூசியோ தலைமையில் காகா உள்ளிட்ட பல திறமையான வீரர்களுடன் தென் ஆப்பிரிக்க வேட்டைக்கு வந்துள்ளது பிரேசில்.
கோல்கீப்பர்களாக ஜூலியோ சீசர், கோமஸ், டோனி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விங்கர்களாக கில்பர்டோ, மைக்கேல் பாஸ்டாஸ், டேணியல் ஆல்வஸ், மைகான் உள்ளனர்.
தடுப்பாட்ட வீரர்களாக கேப்டன் லூசியோ, தியகோ சில்வா, லூய்சயா, ஜூவான் ஆகியோர் உள்ளனர்.
நடுக்கள வீரர்களாக பிலிப்பி மெலோ, கில்பர்டோ சில்வா, ஜோஸ், எலனோ, லிபர்சன், ராமிரஸ், காகா, ஜூலியோ பாப்டிஸ்டா ஆகியோர் உள்ளனர்.
முன்கள வீரர்கள் வரிசையில், ஸ்டார் வீரர் ரோபின்ஹோ, கிராபைட், நில்மார், லூயிஸ் பாபியானோ ஆகியோரைக் கொண்டுள்ளது பிரேசில்.
பிரேசில் அணியின் ஜாம்பவானாக திகழும் பீலே தான் அந்த அணிக்காக அதிக கோல் (77 கோல்கள்) அடித்த ஸ்டார் வீரர் ஆவார். அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து சாதனை படைத்தவர் கஃபு. மொத்தம் 142 போட்டிகளுக்கு இவர்தான் கேப்டனாக இருந்தார்.
உலகக் கோப்பைப் போட்டிகளைப் பொறுத்தவரை மொத்தம் 18 போட்டிகளில் ஆடியுள்ளது பிரேசில். இதுவரை 5 முறை சாம்பியனாகியுள்ளது.
இந்த முறை கிட்டத்தட்ட அனைத்து முன்னணி அணிகளிலும் பல முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை.
பிரேசிலின் ரோனால்டின்ஹோ, இங்கிலாந்தின் டேவிட் பெக்காம், தியோ வால்காட், கானாவின், இத்தாலியின் கிஸப் ரோஸ்ஸி, மார்கோ போரியல்லா, நெதர்லாந்தின் ரூட் வான் நிஸ்டல்ரூயி, பிரான்ஸின் பாட்ரிக் வியரா ஆகியோர் இந்த முறை இடம் பெறவில்லை.
ஸ்டார்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகக் கோப்பைப் போட்டிகள் நிச்சயம் 'வார்' போலத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போரில் பிரேசில் மீண்டும் வென்று 6வது முறையாக சாம்பியனாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் உள்ளது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]