For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

உலக கோப்பை கால்பந்து-மறக்க முடியாத சர்ச்சைகள்

By Chakra
Zinedine Zidane
கால்பந்து என்றவுடனேயே கூடவே கரடுமுரடான சர்ச்சைகளும் நமது நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. அதிலும் பிரபலமான அணிகள் மோதும் ஒவ்வொரு போட்டியுமே ஒரு போர் போலத்தான். ஆடி முடித்து வெற்றி தோல்வி தெரியும் வரை இரு அணி வீரர்களும் மாபெரும் யுத்தத்தையே நடத்தி முடித்திருப்பார்கள்.

இதுபோன்ற போட்டிகளில் சர்ச்சைகளும் வெடிப்பதுண்டு. கடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் பல்வேறு சர்ச்சைகளை உலகம் பார்த்தது. அதில் சில...

ஜினடின் ஜிடேன் கொடுத்த 'முட்டு'

2006 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம். பிரான்ஸும், இத்தாலியும் விறுவிறுப்பாக மோதிக் கொண்டிருந்த நேரம். வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. பிரான்ஸுக்காக ஜிடேன் ஒரு கோலும், இத்தாலிக்காக மாட்டரேஸி ஒரு கோலும் போட்டிருந்தனர்.

இதனால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. படு சூடாக போட்டி நடந்து வந்த நேரத்தில், மாட்டரேஸிக்கும், ஜிடேனுக்கும் இடையே சண்டை மூண்டது. மாட்டரேஸி ஜிடேனின் ஜெர்சியைப் பிடித்து இழுக்க, கோபமடைந்த ஜிடேன் அதைத் தட்டி விட்டார். அப்போது மாட்டரேஸி ஏதோ சொல்ல, கோபமடைந்த ஜிடேன் வேகமாக வந்து அவரது நெஞ்சில் பலமாக முட்டித்தள்ளினார். இதனால் நிலை குலைந்த மாட்டரேஸி அப்படியே கீழே விழுந்து துடித்தார்.

உடனடியாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் ஜிடேன். இறுதிப் போட்டியில் இத்தாலி வென்றது. ஆனால் அதை விட ஜிடேன் கொடுத்த முட்டுதான் ரொம்ப நாட்களுக்குப் பரபரப்பாக பேசப்பட்டது.

கையால் கோலடித்த மாரடோனா

1986ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், அர்ஜென்டினாவும் மோதின. பாக்லாந்துப் போரால் இரு நாடுகளும் சூடாக இருந்த நேரம்.

அந்த காலிறுதிப் போட்டியில், மாரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றிக்குக் கடுமையாக போராடிக் கொண்டிருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது மாரடனோ அடித்த பந்து, இங்கிலாந்து கோல் கீப்பர் பீட்டர் ஷில்டனைத் தாண்டி வலைக்குள் விழுந்தது. அதை கோல் என்று அறிவித்தார் நடுவர் அலி பின் நாசர். இப்போட்டியில், 2-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

ஆனால் மாரடோனா காலால் பந்தை உதைக்கவில்லை, மாறாக கையில் பந்து பட்டு வலைக்குள் விழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இதுகுறித்து மாரடோனா கூறுகையில், பந்து எனது கையில் படவில்லை. கடவுளின் கைதான் பந்தைத் தொட்டு கோலாக்கியது என்று சமாளித்த ஸ்டைல் பல காலத்திற்கு பிரபலமாக இருந்தது.

கோலா, இல்லையா?

இதேபோல 1966ம் ஆண்டு இங்கிலாந்தும், ஜெர்மனியும் மோதிய இறுதிப் போட்டியிலும் ஒரு சர்ச்சை கோல் விழுந்தது.

இரு அணிகளும் வழக்கமான நேரத்தில் தலா 2 கோல்கள் அடித்திருந்தன. இதனால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. அப்போது இங்கிலாந்தின் ஆலன் பால் ஒரு கோலடித்தார். பந்து கோல் கம்பத்தின் கீழே பட்டு சென்றது. பந்து உள்ளே போய் வந்ததா, அல்லது கோல் எல்லைக்குள் போகவில்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது நடுவருக்கு. இதையடுத்து ரஷ்ய லைன்ஸ்மேனிடம் கேட்டபோது அவர் கோல் என்று சிக்னல் கொடுக்கவே இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜெர்மானியர்கள் இதயம் நொறுங்கியது.

உள்ளே புகுந்த 'ஷேக்'

1982ம் ஆண்டு பிரான்ஸுக்கும், குவைத்துக்கும் இடையே நடந்த போட்டியில் ஒரு விநோதம் நடந்தது.

இந்தப் போட்டியின்போது பிரான்ஸ் 3 கோல்களும், குவைத் ஒரு கோலுடனும் இருந்தது. அப்போது பிரான்ஸ் வீரர் அலைன் கிரஸ்ஸி நான்காவது கோலை அடித்தார். ஆனால் குவைத் வீரர்கள் அதை ஏற்கவில்லை.

இதுகுறித்து அவர்கள் நடுவரிடம், நாங்கள் பந்தைத் தடுக்க முயன்றபோது விசில் சத்தம் கேட்டது. இதனால் நடுவர்தான் விசிலடிக்கிறார் என்று நினைத்து கோலைத் தடுக்காமல் விட்டு விட்டோம். எனவே இந்த கோலை ஏற்க முடியாது என்றனர். உண்மையில் அந்த விசிலை அடித்தது, பார்வையாளர் கூட்டத்தில் இருந்த சிலர்தான் என்பது பின்னர் தெரிய வந்தது.

போட்டியைக் காண வந்திருந்த குவைத் ஷேக்கும், அந்த நாட்டு கால்பந்து சங்கத் தலைவருமான ஷேக் பஹத் அல் அகமது அல் சபா இந்தப் பிரச்சினையில் தலையிட்டார். இந்தக் கோலை ஏற்கக் கூடாது. ஏற்றால், போட்டியிலிருந்து விலகி விடுவோம் என எச்சரித்தார். இதையடுத்து நான்காவது கோல் அடிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

இப்படி உலகக்கோப்பைப் போட்டிகளில் எத்தனை சுவாரஸ்யமான சர்ச்சைகள். இந்த போட்டித் தொடரில் என்னென்ன காத்திருக்கிறதோ...?
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+