அர்ஜென்டினாவுக்கு ஆட்டம் காட்டிய ஈரான்.. ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
டெஹ்ரான்: அர்ஜென்டினா அணியுடன் நடந்த போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் கூட அந்த அணிக்கு மிகக் கடுமையான நெருக்கடியைக் கொடுத்த தங்களது நாட்டு அணியை வாழ்த்தியும், புகழ்ந்தும் ஈரான் ரசிகர்கள் ஈரான் முழுவதும் கொண்டாடித் தீர்த்து விட்டனர்.
ஈரான் - அர்ஜென்டினா இடையிலான போட்டியில் அர்ஜென்டினா எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை அர்ஜென்டினாவை கடுமையாக சோதித்து விட்டது ஈரான்.
கடைசி நேரத்தில், ஸ்டாப்பேஜ் நிமிடத்தில்தான் அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து அணியின் மானத்தைக் காப்பாற்றினார்.
இந்த உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஈரான் வெளியேற்றப்பட்டு விட்டது. இருந்தபோதிலும் அர்ஜென்டினாவுக்கு ஆட்டம் காட்டியதையே அந்த நாட்டு ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விட்டனர்.

அந்த பெனால்டி மட்டும் கிடைத்திருந்தால்
அதேசமயம், ஈரான் அணிக்கு கிடைத்திருக்க வேண்டிய பெனால்டி வாய்ப்பு மயிரிழையில் தவறிப் போனதாகவும், அதை நடுவர்கள் கொடுக்காமல் விட்டு விட்டதாகவும் ஈரான் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

திருட்டிட்டாங்க பாஸு…
இதுகுறித்து அதியா என்ற ரசிகர் கூறுகையில், அஷ்கன் டெஜாகாவை, அர்ஜென்டினா வீரர் பாப்லோ சபலேடா பெனால்டி பாக்ஸ் பகுதியில் வைத்து கீழே தள்ளி விட்டார். ஆனால் எங்களுக்குப் பெனால்டி தரப்படவில்லை. கொடுத்திருந்தால் கோல் ஆக்கியிருப்பார்கள் எங்களது அணியினர் என்றார்.

சூப்பர் ஆட்டம்
ஈசான் என்ற இன்னொரு ரசிகர் கூறுகையில், எங்களது அணியினர் அபாரமாக ஆடினார்கள். அர்ஜென்டினா உலகின் மிகப் பெரிய அணிகளில் ஒன்று. அப்படிப்பட்ட அணிக்கு ஆட்டம் காட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். அதை நாங்கள் செய்து விட்டோம் என்றார் உற்சாகத்துடன்.

90 நிமிடப் போராடம்.. மெஸ்ஸி மேஜிக்
கிட்டத்தட்ட 90 நிமிட ஆட்டத்தில் ஈரான் ஆடிய ஆட்டத்தால் அர்ஜென்டினாவால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. கடைசி நேரத்தில் மெஸ்ஸி மேஜிக் நிகழ்ந்து ஈரானியர்களை சோர்வடைய வைத்து விட்டது.

ஊர் ஊராக கொண்டாட்டம்
ஈரான் வீழ்ந்த போதிலும் அர்ஜென்டினாவை நெருக்கடிக்குள்ளாக்கியதை பல ரசிகர்கள் ஈரான் நகரங்களில் கார்களில் வலம் வந்தும் தேசியக் கொடிகளைக் காட்டியும் குதூகலித்தனர்.


Click it and Unblock the Notifications