அமெரிக்கா அட்டூழியம்.. சோமாலியர் என்பதால் உலகக் கோப்பை கால்பந்து நடுவரையே திருப்பி அனுப்பியது!
முகாடிசு: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடுவராக செயல்பட சோமாலியாவைச் சேர்ந்த நடுவர் உமர் ஆர்டன் அமெரிக்கா சென்ற போது, அந்நாட்டு அதிகாரிகள் அனுமதி மறுத்து அவரை திருப்பி அனுப்பினர். இதையடுத்து சொந்த நாடு திரும்பிய அவருக்கு பொதுமக்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆப்பிரிக்க கண்டத்தின் மிகச்சிறந்த கால்பந்து நடுவர்களில் ஒருவராக அறியப்படுபவர் உமர் ஆர்டன். இவர் 2025ஆம் ஆண்டிற்கான ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து நடுவர் என்ற கவுரவத்தைப் பெற்றவர். சில வாரங்கள் முன் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பணியாற்றும் நடுவர்களின் இறுதிப் பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டது. அதில் உமர் ஆர்டனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் நடுவராக செயல்படும் முதல் சோமாலியர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெறவிருந்தார்.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக, கடந்த வாரம் கென்யாவில் உள்ள சோமாலிய தூதரகம் மூலம் முறைப்படி விசா பெற்று உமர் ஆர்டன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். ஆனால், சனிக்கிழமையன்று அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தை அவர் சென்றடைந்த போது அங்கு அவருக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் பின்னணி சரிபார்ப்பு குறித்த சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி, அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதற்கான முழுமையான காரணங்கள் எதுவும் விளக்கப்படவில்லை. அமெரிக்காவுக்குள் நுழைய உமர் ஆர்டனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்கள் பட்டியலிலிருந்து அவரை சர்வதேச கால்பந்து அமைப்பு நீக்கியது.
இந்த ஏமாற்றத்திற்கு பிறகு புதன்கிழமையன்று உமர் ஆர்டன் சோமாலியாவின் தலைநகரான முகாடிசு திரும்பினார். விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு அங்கு திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களும், அரசு அதிகாரிகளும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய உமர் ஆர்டன், தனக்கு ஆதரவாக நின்ற சோமாலிய அரசு, தனது நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச கால்பந்து அமைப்பு ஆகியவற்றுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு தற்போது வெளிநாட்டினரின் குடியேற்றம் மற்றும் விசா நடைமுறைகளில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சுமார் 40 நாடுகளின் பட்டியலில் சோமாலியாவும் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாகவே தகுந்த ஆவணங்கள் இருந்தும் உலகக் கோப்பை நடுவரான உமர் ஆர்டனுக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
