கடுமையான போராட்டத்தைக் கொடுத்த வட கொரியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி

2 கோலடித்து இந்தப் போட்டியில் பிரேசில் வென்றாலும் கூட வட கொரியாவை ஒரு கோலடிக்க விட்டு விட்டது பிரேசில்.
ஜோஹன்னஸ்பர்க்கில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் பிரேசில் எளிதாக வெல்லும், அதிக கோலடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
ஆனால் ரசிகர்களுக்கு வியப்பளிக்கும் வகையில் வட கொரியாவின் ஆட்டம் அமைந்திருந்தது. யானையின் கால்களுக்குள் புகுந்த கட்டெறும்பு போல வட கொரியா டேக்கா காட்டி பிரேசிலை சற்று வியர்க்க வைத்து விட்டது.
கடந்த 54 ஆண்டுகளில் உலகக் கோப்பைப் போட்டியில் வட கொரியா விளையாடுவது இதுவே முதல் முறையாகும். ஆனால் எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் படு லாவகமாக ஆடினர் வட கொரிய வீரர்கள். வெற்றி கிடைக்காது என்று தெரிந்தாலும் கூட வெற்றியை இலக்காக வைத்து ஆடினர்.
இந்த தளராத முயற்சிக்கு ஆட்டத்தின் கடைசி நேரத்தில் ஒரு கோல் மூலம் பலன் கிடைத்தது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோலடிக்கவில்லை. பிரேசிலால் முதல் பாதி ஆட்டத்தில் கோல் போட முடியாமல் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 55வது நிமிடத்தில் மைகான் பிரேசிலின் முதல் கோலைப் போட்டார்.
அடுத்து 71வது நிமிடத்தில் ரோபின்ஹோ 2வது கோலை அடித்தார். இதன் மூலம் பிரேசிலின் வெற்றி உறுதியானது.
இந்த நிலையில் எதிர்பாராத வகையில், 87வது நிமிடத்தில் வட கொரியாவின் யூன் நாம் ஜி ஒரு கோலடித்த வட கொரிய கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.
போட்டி முழுவதிலும் பிரேசிலின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தாலும் கூட வட கொரியர்கள், ரசிகர்களின் மனதை வென்று விட்டனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications