முதல் போட்டியே இப்படியா.. ஜியோ நிறுவனத்தை வெளுக்கும் கால்பந்து ரசிகர்கள்..அப்போ ஐபிஎல் நிலைமை என்ன?
கத்தார்: ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வரும் சூழலில் திடீரென ரிலையன்ஸ் நிறுவனம் மீது ஐபிஎல் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
கால்பந்து ரசிகர்களுக்கு திருவிழாவாக விளங்கும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. இந்த முறை கத்தார் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் தொகுத்து வழங்கும் நாடான கத்தார், ஈக்குவேடார் அணியிடம் தோல்வியை தழுவியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஈக்குவேடார் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரசிகர்கள் விளாசல்
இந்நிலையில் உலகக்கோப்பை தொடங்கிய குஷியில் இருந்த ரசிகர்கள் திடீரென கடும் ஆத்திரமடைந்துள்ளனர். அதுவும் ரிலையன்ஸ் நிறுவனம் மீது தான். இந்தியாவில் உலகக்கோப்பை தொகுத்து வழங்கும் உரிமையை ரிலையன்ஸின் ஜியோ சினிமா நிறுவனம் தான் பெற்றுள்ளது. இதே போல தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

என்ன காரணம்
ஆனால் முதல் நாளான நேற்று ஆன்லைன் ஒளிபரப்பு மிகவும் மோசமாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஜியோ சினிமா செயலியில் நேரலை வீடியோ மிகவும் Buffer ஆகி வந்ததால், ரசிகர்களுக்கு போட்டியை பார்க்கும் ஆர்வமே போய்விட்டது. இதனால் சமூக வலைதளங்களில் இந்த தொடரை பார்க்க வேறு ஏதானும் வழி உண்டா என ஜியோ நிறுவனத்தை விமர்சித்து வருகின்றனர்.

ஐபிஎல் ரசிகர்களும் கோபம்
இது ஒருபுறம் இருக்க, ஜியோவுக்கு எதிரான போராட்டத்தில் ஐபிஎல் ரசிகர்களும் குதித்துள்ளனர். ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் சமீபத்தில் தான் நடந்தது. அதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ஜியோ நிறுவனம் தான் கைப்பற்றியது. இதனால் அடுத்தாண்டு ஐபிஎல் என்ன ஆகப்போகிறதோ என்ற கவலை ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

என்ன அப்டேட்கள்
இதுநாள் வரையில் ஐபிஎல்-ன் டிஜிட்டல் ஒளிபரப்பை ஹாட்ஸ்டார் செய்து வந்தது. அல்ட்ரா ஹெச்டி வரை அவர்கள் வசதிகள் கொடுத்திருந்தனர். எனவே இந்த கால்பந்து உலகக்கோப்பையை வைத்தாவது ஜியோ தனது சேவைகளில் பல அப்டேட்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications