மேளதாளங்கள் முழங்க.. நம்ம மெஸ்ஸி-க்கு கிடைத்த வரவேற்பு.. அர்ஜென்டினா ரசிகர்களின் அசர வைத்த பேரணி!
தோஹா: 2022ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக நட்சத்திர வீரர் மெஸ்ஸி, கத்தார் நாட்டிற்கு வந்ததையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாக பேரணியில் ஈடுபட்டது கால்பந்து ரசிகர்களிடையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 22வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது.
இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. அந்த 32 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் மோத உள்ளன.

குவியும் ரசிகர்கள்
நாளை மறுநாள் தொடங்கும் உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் கத்தார் - ஈகுவடார் அணிகள் மோத உள்ளன. உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக கத்தார் நாட்டு அரசு செலவழித்துள்ள தொகை, சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, உலகக்கோப்பைத் தொடரை நேரில் காண்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் கத்தாரில் குவிந்து வருகின்றனர்.

பயிற்சி போட்டி
உலகக்கோப்பை திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே, ரசிகர்களின் கொண்டாட்டத் திருவிழா காண்போரை பிரமிக்க வைத்துள்ளது. அந்த வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி இன்று கத்தார் சென்று அடைந்துள்ளது. உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, ஐக்கிய அரபு எமிரேட்சுடன் நேற்று காட்சி போட்டியில் விளையாடியது. அபுதாபியில் நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரசிகர்களின் பேரணி
இந்த போட்டிக்கு பின் அபுதாபியில் இருந்து இன்று அதிகாலை அர்ஜென்டினா அணி கத்தார் வந்து சேர்ந்தது. அப்போது மெஸ்ஸிக்கு ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாகமான வரவேற்பை அளித்தனர். அதுமட்டுமல்லாமல் கால்பந்து நாயகன் மெஸ்ஸியை வரவேற்க, அர்ஜென்டினா கொடியுடன் ரசிகர்கள் பேரணியில் ஈடுபட்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கடைசி உலகக்கோப்பை
மெஸ்ஸிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பால், அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் 1930, 1978, 1986, 1990 மற்றும் 2014 என 5 முறை உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா விளையாடி உள்ளது. அதில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் கால்பந்தில் அர்ஜென்டினாவின் முகமாக உள்ள மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும் என தெரிகிறது. அதனால் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பையை வென்று மறக்க முடியாத தொடராக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications