பிரான்ஸை 'கொன்று' தென் ஆப்பிரிக்கா 'தற்கொலை'!

கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிப் போட்டியில் இத்தாலியுடன் கடுமையாக மோதி மயிரிழையில் தோல்வியைத் தழுவிய பிரான்ஸுக்கு, தென் ஆப்பிரிக்க பயணம் மகா மோசமானதாக, செரிக்கவே முடியாத கடுமையான கசப்பான அனுபவமாக மாறி விட்டது.
இப்படி ஒரு தோல்வியை சந்தித்ததில்லை என்று கூறும் அளவுக்கு ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் அசிங்கப்பட்டு வெளியேறியுள்ளது பிரான்ஸ்.
நேற்று நடந்த விறுவிறுப்பான போட்டியில் தென் ஆப்பிரி்ககா, பிரான்ஸை 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி விட்டது.
இதன் மூலம் பிரான்ஸ் உலகக்கோப்பைப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அதேசமயம், இது தென் ஆப்பிரிக்காவுக்கும் உதவவில்லை. குறைவாக புள்ளிகள் எடுத்த அந்த அணியும் போட்டித் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் நாடு ஒன்று முதல் சுற்றோடு மூட்டையைக் கட்டியது இதுவே முதல் முறையாகும்.
'ஏ' பிரிவில் உருகுவே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம், 2வது இடத்துக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே போட்டி நடந்தது. அதில் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் மெக்சிகோ 2வது இடத்தைப் பிடித்ததால், மீதமிருந்த தென் ஆப்பிரிக்காவும், பிரான்ஸும் வெளியேறி விட்டன.
பிரான்ஸ் அணிக்கு இந்த தோல்வி 2வது தோல்வியாகும். ஒரு போட்டியில் அது டிரா செய்திருந்தது. இதனால் முதல் சுற்றோடு பேக்கப் செய்யப்பட்டு விட்டது.
ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோல் கூட போட முடியாமல்தவித்தது பிரான்ஸ். அதேசமயம், 2 கோல்கள் அடித்து ஆணித்தரமான நிலையில் இருந்தது தென் ஆப்பிரிக்கா. 20வது நிமிடத்திலேயே பொங்கானி குமாலோ அருமையான கோலடித்தார். தொடர்ந்து 37வது நிமிடத்தில் காட்லேகா மெபலா கோலடித்து அணியை வலுப்படுத்தி விட்டார்.
பெருத்த அவமானத்துடன் 2வது பாதியில் சற்று கவனமுடன் ஆடிய பிரான்ஸுக்கு 70வது நிமிடத்தில்தான் கோல் வாய்ப்பு கிடைத்தது. புளோரன்ட் மெலோடா கோலடித்து ஆறுதல் தேடித் தந்தார். இருப்பினும் டிரா செய்யக் கூட முடியாமல் போனது பிரான்ஸ் என்பது பரிதாபத்துக்குரியது.
வீரர்களிடையே ஏற்பட்ட மோதல், பயிற்சியாளருக்கும், வீரர்களுக்கும் இடையே நடந்த உச்சகட்ட மோதல், திடீரென நடந்த ஸ்டிரைக் உள்ளிட்ட பல காரணங்களால் பிரான்ஸ் அணி பலவீனமடைந்து இப்போது அவமானகரமான தோல்வியுடன் போட்டித் தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
தங்கள் அணியின் இந்தத் தோல்வியால் பிரான்ஸ் நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications