கடும் மோதலுக்குப் பின் போர்ச்சுகல்-ஐவரி கோஸ்ட் டிரா

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் போட்டியில் போர்ச்சுகல் எப்படியும் வெற்றி பெற்று விடும் என அந்த நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். சூப்பர் ஸ்டார் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலடிக்கப் போவதையும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எதுவுமே நடக்கவில்லை.
இரு அணிகளும் தொடக்கத்திலிருந்தே தத்தமது வலுவை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் யாராலும் கோல் அடிக்க முடியவிலல்லை. ஒவ்வொரு அணியின் கோல் முயற்சியையும் எதிரணி வீரர்கள் அழகாக முறியடித்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.
முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் சம நிலையில் மோதின. ஐவரி கோஸ்ட் வீரர்களான ஜெர்வின்ஹோ, சாலமோன் கலு ஆகியோரது ஆட்டம் அபாரமாக இருந்தது.
போர்ச்சுகல் தரப்பில் வழக்கம் போல ரொனால்டோவின் ஆட்டம் கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் ரொனால்டோவுக்கு கோலடிக்கும் வாய்ப்பு
கிடைத்தது. ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.
2வது பாதி ஆட்டத்திலும் அனல் பறந்தது. ஐவரி கோஸ்ட் வீரர் ஜெர்வின்ஹோவுக்குக் கிடைத்த கோல் வாய்ப்பை, போர்ச்சுகல் கோல்கீப்பர் எடுவர்டோ அழகாக தடுத்து விட்டார்.
ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் அனைவரும் எதிர்பார்த்த டிரோபா அறிமுகமானார். அவருடைய வருகையால் ஐவரி கோஸ்ட் எப்படியும் கோலடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அதை போர்ச்சுகல் வீரர்கள் முறியடித்து விட்டனர்.
இறுதியில் ஆட்ட நேரமுடிவில்இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது.
அடுத்து தனது போட்டியில் வலிமை வாய்ந்த பிரேசிலை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது ஐவரி கோஸ்ட்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications