
டாஸ் காசை மறந்தார்
மகளிர் சூப்பர் லீக் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதில் ரீடிங் அணிக்கும், மான்செஸ்டர் சிட்டி அணிக்கும் இடையிலான போட்டியின் ரெப்ரீ டேவிட் மெக்நமரா டாஸ் போடும் காசை மறந்து அறையில் வைத்து விட்டு வந்திருக்கிறார்.

ராக், பேப்பர், சிசர்ஸ் விளையாடுங்க
இந்த போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போட்டி என்பதால் போட்டி துவங்கும் நேரத்தை கருத்தில் கொண்டு அந்த சூழ்நிலைக்கு ஏற்ப யோசித்த டேவிட் "ராக், பேப்பர், சிசர்ஸ்" என்ற விளையாட்டின் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்க முடிவு செய்துள்ளார். அதை இரு அணி கேப்டன்களிடம் கூறி அதை செயல்படுத்தியுள்ளார்.

நடவடிக்கை எடுத்த அமைப்பு
தொலைக்காட்சி போட்டி என்பதால் தன் தவறை சரி செய்யும் வகையில் ரெப்ரீ சாமர்த்தியமாக நடந்து கொண்டார் என எடுத்துக் கொள்ளாத கால்பந்து அமைப்பு, அவருக்கு மூன்று வாரம் தடை விதித்துள்ளது. கால்பந்து விளையாட்டின் நோக்கத்துக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராக், பேப்பர், சிசர்ஸ் என்றால் என்ன?
"ராக், பேப்பர், சிசர்ஸ்" என்பது நம் ஊரின் "சா பூ த்ரீ" போன்றது. சா பூ த்ரீ-இல் எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். ஆனால், ராக், பேப்பர், சிசர்ஸ் விளையாட்டில் இரண்டு பேர் மட்டுமே பங்கு பெறலாம். ராக், பேப்பர், சிசர்ஸ் ஆகிய மூன்று பொருட்களில் ஒவ்வொரு பொருளும் மற்ற இரண்டு பொருட்களில் ஒன்றை விட சிறியதாகவும், மற்றொன்றை விட பெரியதாகவும் இருக்கும். இந்த விளையாட்டில் பங்கு பெறும் இருவரும் ஒரே நேரத்தில் மூன்றில் ஒரு பொருளை தங்கள் கைகளில் காட்ட வேண்டும். யார் பெரிய பொருளை காட்டுகிறாரோ அவர் வெற்றியாளர் ஆவார்.