உலகக் கோப்பைப் போட்டிகளில் முதல் வெற்றியை சுவைத்தது ஸ்லோவேனியா

நேற்று போலக்வனேயில் நடந்த போட்டியில் அல்ஜீரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்லோவேனியா. வெற்றிக்கான கோலை அடித்து ஸ்லோவேனியர்களை குஷியில் ஆழ்த்தினார் கேப்டன் ராபர்ட் கோரன்.
ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் இந்த கோல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இரு அணிகளும் கோலடிக்க ஆரம்பத்திலிருந்தே கடுமையாக முட்டி மோதினர். விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து ஆடி வந்த அல்ஜீரிய வீரர் அப்தல் காதர் கெஸ்ஸால் ரெட் கார்டு காட்டி வெளியேற்றப்பட்டார். அதையடுத்து ஸ்லோவேனியாவுக்கு கோலடிக்கும் வாய்ப்பு வந்து சேர்ந்தது.
தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கேப்டன் கோரன் அபாரமாக அதை கோலாக்கி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
இந்த வெற்றி கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்லோவேனியாவுக்கு கிடைத்துள்ள முதல் உலகக்கோப்பை வெற்றியாகும். 8 ஆண்டுகளுக்கு முன்புதான் தனது முதல் உலகக் கோப்பைப் போட்டியை ஆடியிருந்தது ஸ்லோவேனியா. ஆனால் அதில் ஒரு கோல் கூட அது அடிக்க முடியவில்லை.
இந்த உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியிலேயே அது கோலடித்துள்ளது அணியையும், ஸ்லோவேனியா ரசிகர்களையும் உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது.
நேற்றைய போட்டிய முன்னாள் பிரான்ஸ் அணியின் சூப்பர் ஸ்டார் ஜினெடின் ஜிடேன் பார்த்து ரசித்தார். இவர் அல்ஜீரியப் பெற்றோருக்குப் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications