வந்தது உலகக் கோப்பை கால்பந்து-சுருண்டது கிரிக்கெட் பந்து!
By Chakra
oi-Akkhan
சென்னை: கிரிக்கெட்டை விட உயர்ந்த ஒரு விளையாட்டு உண்டா என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு படா ஷோக்காக ஷோ காட்டிக் கொண்டிருந்த கிரிக்கெட் இன்று எங்கே, எங்கே என்று பூதக்கண்ணாடி வைத்துத் தேடும் அளவுக்கு தேய்ந்து காணாமல் போயுள்ளது- காரணம் உலகக் கோப்பை கால்பந்து.
இந்த கிரிக்கெட்டுக்குத்தான் இந்தியாவில் எவ்வளவு ஒசத்தியான மரியாதை, உச்சாணியான இடம், ஒய்யாரமான கெளரவம். தேசிய விளையாட்டான ஹாக்கி ஒருபக்கம் ஐ.சி.யூவில் கிடக்க, இந்த கிரிக்கெட்டை தூக்கி சிம்மாசனத்தில் வைத்து நம்மவர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்கு நாட்டைப் பிடித்து ஆட்டியது கிரிக்கெட் மோகம்.
ஆனால் எந்த எத்தனாக இருந்தாலும், சரியான ஒரு ஜித்தன் கிடைத்தால், தூக்கி சாப்பிட்டு விடலாம் என்பது நிஜமாகியுள்ளது- கால்பந்து ரூபத்தில்.
இன்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கால்பந்து பற்றிய பேச்சுத்தான்.
விளையாட்டு குறித்து தெரிகிறதோ, இல்லையோ போட்டிகளைப் பற்றியும், தங்களுக்குத் தெரிந்த, மற்றவர்கள் மூலம் அறிந்த வீரர்களைப் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர் மக்கள். ''அது ஆஃப் சைடே இல்லை, மாப்ளே, ரெஃரீ தப்பா விசில் ஊதிட்டார்'' என்று படு நுணுக்கமாக பேச ஆரம்பித்து விட்டனர்.
டோணி, ஷேவாக், ரெய்னா என்று உச்சரித்துக் கொண்டிருந்த வாய்களில் இன்று ரொனால்டாவும், டிரோபாவும், எட்டோவும் உட்கார்ந்து கொண்டு டோணி அன் கோவை பேக்கப் செய்து விட்டனர்.
அந்த டோர்னமென்ட்டில் அத்தனை ரன், இந்த டோர்னமென்ட்டில் இத்தனை ரன். அவன் அத்தனை சிக்சர் அடிச்சான், இவன் இத்தனை கேட்ச் பிடிச்சான் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் இன்று பேபியானோ எத்தனை கோல் அடிப்பார், கிளோஸ் எத்தனை கோல் அடிப்பார், யார் சூப்பர் கோல் கீப்பர் என்று பேச ஆரம்பித்து விட்டனர்.
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இன்று நீக்கமற நிறைந்திருக்கிறது உலகக் கோப்பைக் கால்பந்து. இந்த களேபரத்தில் ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடுவதைப் பற்றிக் கவலைப்படுபவர் யாரேனும் உள்ளனரா என்பது சந்தேகமாகி விட்டது.
இதுவே வேறு நேரமாக இருந்திருந்தால் டோணி அன் கோவின் பழைய சாதனைகள், பழைய சோறு வேதனைகள் என்று அக்குவேறு ஆணிவேறாக புள்ளி விவரங்களை ஆராய்ந்து தள்ளியிருப்பார்கள். ஆனால் செய்தித் தாள்களில் கூட அதுகுறித்து எந்தவிதமான விரிவான செய்தியையும் காண முடியவில்லை. எல்லா செய்தித் தாள்களின் விளையாட்டுப் பக்கங்களையும் இன்று பெரிதாக ஆக்கிரமித்து விட்டது உலகக் கோப்பை கால்பந்து.
கிரிக்கெட்டை தூக்கிச் சாப்பிட, ஒரேயடியாக ஓரம் கட்டக் கூடிய தகுதியுடன் கூடிய ஒரே விளையாடடு என்பதை கால்பந்து நிரூபித்து விட்டது. இதற்காகவாவது இந்திய கால்பந்து அணி உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும் அளவுக்கு உயர வேண்டும். அப்போதுதான், அன்ன, ஆகாரம் இல்லாமல் டிவி பொட்டி முன்பு கிரிக்கெட் போட்டியை கொட்டக் கொட்டக் கண்விழித்து விடிய விடிய பார்த்துக் கொண்டிருக்கும் அவலம் ஒழியும்.
பி.கு. கேப்டன் டோணிக்கு மிகவும் பிடித்த அணி பிரேசில். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்...
எனக்கு எப்போதுமே பிரேசிலைத்தான் பிடிக்கும். ஒரு கோல்கீப்பராக கால்பந்து விளையாட்டில் கோல்கீப்பரின் பணி மிகவும் அசாத்தியமானது, முக்கியமானது என்பதை அறிவேன். அதை விட முக்கியமாக கிரிக்கெட்டில் கேப்டன் பதவியும், கால்பந்தில் கோல்கீப்பர் பணியும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அணி வென்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். தோற்றால் கீழே தூக்கிப் போட்டு விடுவார்கள் என்றார் டோணி.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]