ஃபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - மிரட்ட வருகிறது பிரான்ஸ்!

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
---
நாடு : பிரான்ஸ்
சி பிரிவில் டென்மார்க், ஆஸ்திரேலியா, பெரு அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 16ல் ஆஸ்திரேலியா
ஜூன் 21ல் பெரு
ஜூன் 26ல் டென்மார்க்
ஃபிபா தரவரிசை : 7
கடந்த உலகக் கோப்பையில் : காலிறுதி
உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1998ல் சாம்பியன்
முக்கிய வீரர்கள் : கிலியான் மபாப்பே, ஆந்தோனி கிறீஸ்மான், பால் போக்பா, சாமுவேல் உம்திதி
கோச் : டிடியர் டெஸ்சாம்ப்ஸ்
---
ஜினதின் ஜிதானே, தியரி ஹென்றி போன்ற தலைச் சிறந்த வீரர்கள் அடங்கியிருந்த பிரான்ஸ் அணி ஒரு காலகட்டத்தில் உலகின் மிகவும் வலுவான அணியாக இருந்தது. உலகக் கோப்பையை வென்றதுடன், ஐரோப்பிய போட்டிகளில் பட்டங்கள் என வெற்றிகளை குவித்து வந்தது.
இடையில் உலகத் தரவரிசையில் 27வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதுவே அந்த அணியின் மோசமான நிலையாக இருந்தது. டெஸ்சாம்ப்ஸ் கோச்சாக சேர்ந்த பிறகு, நிலைமை மாறியது.
மீண்டும் உலகின் மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக பிரான்ஸ் உருமாறியுள்ளது. தற்போதுள்ள அணியில் பல புகழ்பெற்ற வீர்ரகள் உள்ளனர். இவர்களில் யாரை களமிறக்குவது என்று யோசிக்கும் அளவுக்கு ஒவ்வொரு வீரரும் திறமையானவர்களாக உள்ளனர்.
கோப்பையை வெல்லும் அணிகளாகக் கருதப்படும் நடப்பு சாம்பியன், ஜெர்மனி, பிரேசில் போன்றவற்றைவிட மிகவும் வலிமையானதாக பிரான்ஸ் உள்ளது.
முதல் சுற்று ஆட்டங்கள் எல்லாம் அதற்கு ஒரு பிரச்னையே இல்லை. அரை இறுதியைத் தாண்டி பைனல் நுழையுமா என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.


Click it and Unblock the Notifications