ஃபிபா தரவரிசை.. முதலிடத்தில் பிரான்ஸ்.. ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா சர்ர்ர்ர்!
பாரிஸ்: ஃபிபா உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற பிரான்ஸ், உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பைனலில் விளையாடிய குரேஷியா மற்றும் அரை இறுதியில் விளையாடிய இங்கிலாந்து தரவரிசையில் முன்னேறின. அதே நேரத்தில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா கடும் சரிவை சந்தித்தன.

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் கடந்த மாதம் ரஷ்யாவில் நடந்தன. அதற்கு பின், முதல் முறையாக உலகத் தரவரிசையை ஃபிபா வெளியிட்டுள்ளது.
முந்தைய தரவரிசை போல் இல்லாமல், வென்றால் புள்ளி சேர்க்கப்படும், தோற்றால் புள்ளி கழிக்கப்படும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வெளியிடப்பட்டுள்ள தரவரிசையில், உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ், 6 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
லீக் சுற்றிலேயே வெளியேறிய முந்தைய சாம்பியன் ஜெர்மனி, இந்த புதிய விதியால் கடுமையாக பாதிக்கப்பட்டது. முதலிடத்தில் இருந்த ஜெர்மனி, 15வது இடத்துக்கு தள்ளப்பட்டது. லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா 6 இடங்கள் பின்தங்கி 11வது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை பைனலுக்கு முதல் முறையாக நுழைந்து உலக நாடுகளை ஆச்சரியப்படுத்திய குரேஷியா, 16 இடங்கள் முன்னேறி, 4வது இடத்தைப் பிடித்துள்ளது. அரை இறுதிக்கு நுழைந்த இங்கிலாந்து, 12 இடங்கள் முன்னேறி 6வது இடத்தில் உள்ளது.
உருகுவே அணியும் டாப் 10க்குள் நுழைந்துள்ளது. டாப் 10ல் உள்ள நாடுகளில் 8 நாடுகள் ஐரோப்பிய நாடுகள். ஃபிபா உலகத் தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள்: பிரான்ஸ், பெல்ஜியம், பிரேசில், குரேஷியா, உருகுவே, இங்கிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், டென்மார்க்.


Click it and Unblock the Notifications